நாளிதழ்களில் இன்று: ‘அதிமுகவில் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’ - அமைச்சர் விளக்கம்
இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்?'

பட மூலாதாரம், Getty Images
ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவில் கூட இணையலாம் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஒரு நேர்காணலில் பேசியதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
பின் இது தொடர்பாக பாண்டியராஜனிடம் கேட்டபோது, 'திட்டமிடப்பட்டு கூறிய வார்த்தைகள் அல்ல அவை. எதார்த்தமாக சொன்னேன்' என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ 1500 கோடி'

பட மூலாதாரம், Getty Images
அரசு அலுவலகங்களில் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"இதுவரை அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண நிலுவை 1,500 கோடி ரூபாய். இதில் அதிக அளவாக ரூ.900 கோடி தமிழ்நாடு குடிநீர் வாரியம் செலுத்த வேண்டியுள்ளது. அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூல் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சிறிது சிறிதாக நிலுவை தொகையைச் செலுத்தி விடுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தினத்தந்தி: 'மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசார இயக்கம்'

பட மூலாதாரம், Getty Images
ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
வங்கி முறைகேடு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ரபேல் போர் விமான ஊழல், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை குறித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்துவது என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு தன்ணீரும் கடத்தல்’

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் நீர்வளத்தைக் காக்க கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மினரல் வாட்டர் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து லாரியில் லட்சகணக்கான லிட்டர் தண்ணீரை தினமும் கடத்திச் செல்கிறார்கள் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற லாரியை சோதனைசாவடியில் நிறுத்தி போலீஸார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது போலீஸாரை ஏமாற்றிவிட்டு லாரியை ஓட்டுநர் வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். அதன் பின்னரே, மணல் கடத்தப்படுவதுபோல தண்ணீரும் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது என்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












