ரஷ்யா: ஹெலிகாப்டர் விபத்தில் பயணித்த அனைவரும் பலி
ரஷ்யாவில் உள்ள வடகிழக்கு சைபீரியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA/HELI.UTAIR.RU
க்ராஸ்நோயார்ஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள இகார்கா எனும் நகரத்தில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில், எம்.ஐ-8 எனும் அந்த ஹெலிகாப்டர் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10:20 மணிக்கு விழுந்து நொறுங்கியதாக அவசரகால நடவடிக்கைகளுக்கான ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்று ஊழியர்கள் மற்றும் 15 பயணிகள் என பயணித்த அனைவரும் கொல்லப்பட்ட இந்த ஹெலிகாப்டர், ஒரு கச்சா எண்ணெய் உற்பத்தி மையத்துக்கு அந்த ஊழியர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில், மேலெழும்பிய சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டரின் சிறகு ஒன்று, அருகில் பறந்துகொண்டிருந்த வேறு ஒரு ஹெலிகாப்டர் சுமந்து வந்த சரக்குப் பெட்டகத்தின் மீது மோதி, அதில் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது.
அதனால் அந்த ஹெலிகாப்டர் அந்த இடத்திலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
சரக்கு ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் உடைய்ர் எனும் ரஷ்ய நிறுவனத்துக்குச் சொந்தமானவை.

கள ஊழியர்களின் கவனமின்மை மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருவதாக ஸ்வெட்லானா பெட்ரென்கோ எனும் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதன் பதிவுகள் இந்த விபத்தில் சேதமடையவில்லை.
விபத்து நிகழ்ந்தபோது, வானிலை நன்றாகவே இருந்தது என ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













