ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த கேங்க்ஸ்டர்

பட மூலாதாரம், IBO/SIPA/REX/SHUTTERSTOCK
பாரிஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோசமான கைதி ஒருவர் தப்பியுள்ளதாக ஃபிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிடொனி வைத் தப்பிக்க ஏதுவாக சிறையின் நுழைவு வாயிலில் இருந்தவர்களை, ஆயுதங்களுடன் இருந்த பல நபர்கள் திசை திருப்பினர். அப்போது ஒரு ஹெலிகாப்டர் முற்றப்பகுதியில் தரையிரங்கியது.
திருட முயற்சித்து அது தோல்வியுற்று, அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதற்காக 46 வயதான வைத், 25 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
வைத் தப்பிக்க முயற்சி செய்தது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக 2013ல் சிறை பாதுகாவலர்களை பிடித்து வைத்துக் கொண்டு, டைனமைட் மூலம் கதவுகளை உடைத்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சிறைக்கு வந்த அரை மணி நேரத்திலேயே, அங்கிருந்து தப்பிக்க அவர் முயற்சித்தார்.
தற்போது, சிறையின் முற்றத்திலிருந்து வைதும், அவரது கூட்டாளிகளும் தப்பித்துள்ளதாக ப்ரான்ஸின் செய்தி வளைதளமான யூரோப் 1 கூறியுள்ளது.
ஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளரை அவர்கள் பணயகைதியாக எடுத்திருந்தனர். அந்த பயிற்றுவிப்பாளர் அவரது மாணவருக்காக காத்திருந்த நிலையில் அவரை மிரட்டி சிறைக்கு ஓட்ட வைத்துள்ளனர்.
விமான ஓட்டுநர் தற்போது விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வைத், கறுப்பு நிற ரெனால்ட் காரில் சென்றதாக பி எஃப் எம் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், AFP
வெவ்வேறு வாகனங்களில் அவர் மாறி மாறி செல்வதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் பகுதி முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். "தப்பித்தவரை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹாலிவுட் பாணி குற்றங்களை விரும்பும் கேங்க்ஸ்டர்
1972ஆம் ஆண்டு பிறந்த வைத், பாரிஸின் பயங்கரமான பகுதியில் வளர்ந்தவர்.
1990களில் ஆயுதங்கள் வைத்து கொள்ளை அடிப்பது மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஒரு குழுவை வைத்து ஈடுபட்டு வந்தார்.

பட மூலாதாரம், AFP
அல் பச்சீனோ உள்ளிட்ட ஹாலிவுட் கேங்க்ஸ்டர் படங்கள் தன்னை அதிகமாக ஈர்த்ததாக வைத் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
ஃபிரான்ஸ் காவல்துறையினரால் "ஏழுத்தாளர்" என்று அழைக்கப்பட்டார் வைத்.
2001 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வைத்து கொள்ளையில் ஈடுபட்டதற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது.
2013 ஆண்டு சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததிற்காக, கடந்தாண்டு அவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP
"அவரது மனதின் இடுக்கில், அவர் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. ஆனால் அவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார். அவர் யோசனைகளை மறைத்தே வைத்திருப்பார்" என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












