நாய்களுக்கு 'ஷூ' அணியச் சொல்லும் சுவிட்சர்லாந்து காவல்துறை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகர காவல் துறையினர் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காக்க அவற்றுக்கும் காலணிகளை அணிவிக்குமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

dogs

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது.

'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சூரிக் நகரின் காவல் துறை இதற்காகத் தொடங்கியுள்ளதாக எஸ்.ஆர்.எஃப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சாலைகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாகி இருக்கும் என்பதால் தங்கள் 'நான்கு கால் நண்பர்களை' எவ்வாறு வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது என்று காவல் துறை இந்தப் பிரசாரம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறது.

நாய்களை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்பு வெப்ப அளவு எவ்வளவு என்பதை தங்களின் கைகளை ஐந்து நொடிகள் தொடர்ந்து நிலத்தில் வைத்து அறிந்து சோதித்துக்கொள்ளுமாறு சூரிக் காவல் துறையினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Swiss police dogs

பட மூலாதாரம், STADTPOLIZEI ZÜRICH

30 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது நிலத்தில் காலூன்றி நடக்கும் நாய்களுக்கு 50 - 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகத் தோன்றும் என்றும் அதனால் அவற்றுக்கு அசௌகரியம் உண்டாகும் என்றும் சூரிக் நகர காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் மைக்கேல் வாக்கர் கூறியுள்ளார்.

குளிர் பிரதேசமான அந்நாட்டில், சென்ற ஜூலை மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வறட்சி உண்டாகியுள்ளதாக, ஸ்விஸ்இன்ஃபோ செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்து சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, தப்பியோடிய நபரை போலீஸ் நாய் துரத்தி பிடித்த காட்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :