ராணுவ வாகனம் ஏறி போராட்டக்காரர் பலி: காஷ்மீரில் பதற்றம்

பட மூலாதாரம், AFP
காஷ்மீரில் வெள்ளிக்கிழமையன்று நடந்த போராட்டத்தின்போது அதில் பங்கேற்ற இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவ வாகனம் ஏறியதில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ஆளுகைக்கு கீழுள்ள காஷ்மீர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ராணுவ ஜீப் மேலே ஏறியதில் உயிரிழந்த கைசர் பட்டின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டதால் அவர்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதன் காரணமாக ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
ரமலான் தினத்தின்போது அப்பகுதியில் போராட்டக்கார்களின் இருப்பிட பகுதியாக தாங்கள் நினைக்கும் மசூதி ஒன்றில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது கடுமையாக நடந்துகொண்டதை தொடர்ந்தே இந்த சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.
போராட்டக்காரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காகவே காவல் துறையினர் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று பாதுகாப்புப் படை வீரர்கள் கூறும் நிலையில், வேண்டுமென்றே வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டிச்சென்றதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், AFP
இதைத்தொடர்ந்து சனிக்கிழமையன்று ஸ்ரீநகரிலுள்ள பெரும்பாலான கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. மேலும், நகரிலுள்ள சாலைகளெங்கும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சில நாட்களில் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
1980களின் பிற்பகுதியிலிருந்து முஸ்லிம் பிரிவினைவாதிகள் இந்திய ஆட்சிக்கு எதிரான வன்முறைப் பிரசாரத்தை பொதுமக்கள் பலரின் ஆதரவோடு முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாக உரிமை கொண்டாடும் காஷ்மீரில் இதுவரை ஏற்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் சிக்கி இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












