‘’மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’’- காஷ்மீர் இளைஞர்
- எழுதியவர், ஆமிர் பீர்ஜடா
- பதவி, பிபிசி
என்னால் இரண்டு வாரமாக சரியாக நடக்க இயலவில்லை. இது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இந்த சிறுவனுக்கு என்ன ஆனது ? என்ன பிரச்சனை அவனுக்கு? ஏன் அவனால் நடக்க இயலவில்லை என்று என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், என் பள்ளி ஆசிரியர்கள் என யாரும் யோசிக்கவில்லை. இது என் துரதிருஷ்டம். - பதின்ம வயதில் தான் பலியல் வல்லுறவுக்கு உள்ளானதை நினைவுகூர்கிறார் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞர்.
தன்னை பற்றிய அடையாளங்களை அவர் வெளியிட விரும்பவில்லை.
அந்த இளைஞர் அவருடைய 14 வயதில் மத போதகர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
"எனது உறவினர் ஒருவர் தனது வணிகத்தில் மோசமான இழப்பை சந்தித்தார். இதிலிருந்து மீள வாய்ப்புள்ளதா என மதபோதகர் ஒருவரது உதவியை நாடி சென்றார். அந்த மத போதகர் `ஜின்`கள் (நல்ல ஆவி) அவரது பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும், ஆனால் ஜின்கள் 10 - 14 வயதுடைய சிறுவர்களிடம் மட்டும்தான் பேசும் என்றும் கூறினார்." என்று பிபிசியிடம் கூறினார் பாலியல் வல்லுறவுக்கு ஆளான அந்த இளைஞர்.

ஜின்கள் இரவில் தான் வரும் என்றும், அதனால் என்னை இரவில் அங்கு விட்டு செல்லுமாரும் எனது உறவினரிடம் அந்த மத போதகர் கூறினார்.
துயர்மிகுந்த நாட்கள்
"எனது ஆன்மா எனது உடலைவிட்டு சென்றுவிட்டது போல வலியில் நான் துடித்தேன். நான் கத்த விரும்பினேன். ஆனால் அந்த மத போதகர் அவரது கையால் என் வாயை மூடினார். இன்னும் ஐந்து நிமிடம்தான் பொறுத்துக் கொள் என்றார். எல்லாம் முடிந்தப் பின், இதனை வெளியில் கூறினால், அவருடைய ஜின்கள் என்னை அழித்துவிடும் என்று பயமுறுத்தினார்" என்று துயர்மிகு அந்நாட்களை நினைவு கூர்கிறார்.

"அந்த ஆண்டில் மூன்று முறை நான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன். எனது உறவினர்கள் யாருக்கும் இது குறித்து தெரியவில்லை. எனக்கு அவர்களுடன் இது குறித்து உரையாட அச்சமாக இருந்தது. நான் பிரச்சனையில் இப்போது வசமாக சிக்கிக் கொண்டுவிட்டதாக எண்ணினேன்" என்கிறார் அவர்.
ஆண்களும் அதிகளவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், சமூக எண்ணம் அல்லது பொது புத்தி மற்றும் இழுக்கு காரணமாக இது குறித்து யாரும் வெளியே உரையாடுவதில்லை.

"பெண்களுக்கு சில விதிகளை இந்த சமூகம் வலியுறுத்தி இருப்பதை போல, ஆண்களுக்கும் சில விதிகளை முன்மொழிந்திருக்கிறது. ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவது குறித்து வெளிப்படையாக பேச மனத்தடை இருக்கிறது. பொதுபுத்தி அவ்வாறாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது." என்கிறார் உளவியலாளர் உஃப்ரா மிர்.
இந்த காஷ்மீரி இளைஞரும் ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குற்ற உணர்வில்தான் வாழ்ந்து இருக்கிறார்.
அவர் சொல்கிறார், "இது என் தவறு அல்ல. நான் ஏன் எனக்குள்ளேயே புழுங்க வேண்டும்? ஏன் இதை பற்றி வெளியே பேசாமல் இருக்கிறேன்? என்று எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்விலிருந்து மீள எனக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது." என்கிறார் அவர்.
பாடத்திட்டம்
"பாலியல் சீண்டல்கள். அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நமது குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். அது நம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்கிறார் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான அந்த இளைஞர்.

அந்த காஷ்மீரி இளைஞர் உட்பட பாதிக்கப்பட்ட பலர் அந்த மத போதகருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் கூறுகிறார், "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் தொலைக்காட்சியில், காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் அந்த மத போதகரால் யாரேனும் பிரச்சனைக்கு உள்ளாகி இருந்தால் அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், தைரியமாக முன்வந்து கூறுங்கள் என்றார். அப்போதுதான் நான் உணர்ந்தேன், அந்த மதபோதகர் மீது பிற வழக்குகளும் பதியப்பட்டு இருக்கிறது என்று" என்கிறார்.
இந்த இளைஞர் இப்போது குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளராக பரிணமித்து இருக்கிறார். 6+பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்காக போராடி வருகிறார்.
புறக்கணிக்கப்பட்ட பிரச்சனை
உலக சுகாதார அமைப்பு, சிறுவர்களும் இளைஞர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுது பெரும் பிரச்சனை. ஆனால், அது புறக்கணிக்கப்படுகிறது என்று 2002 ஆம் ஆண்டு கூறி இருந்தது.
இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார். 2016 ஆம் ஆண்டில் மட்டும், இது தொடர்பாக 36,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













