சென்னையில் அறிவியல் மாநாட்டை அலங்கரித்த மாணவ ஆராய்ச்சியாளர்கள்

சென்னையில் நடக்கும் 25வது தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு, அவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தை கடுமையாக பாதித்த டெங்கு நோய்க்கு எளிமையான மருந்து, கொசு தடுப்பான் போன்றவை, போக்குவரத்துக்கு இடர்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், மின்சாதன கழிவுகளை மறுசுழற்சி செய்வது, விவசாயத்தை மேம்படுத்துவது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சாதனம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி, விளக்கம் அளித்தனர்.
முதல்முறையாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்பு
தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ ஆராய்ச்சியாளர்கள் மூன்று மாத கால ஆராய்ச்சிக்குப் பிறகு சமர்ப்பித்த 282 அறிவியல் திட்டங்கள் இந்தப் போட்டியில் இடம்பெற்றன என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பு ஆகியோர் ஒன்றிணைந்து தேசிய அளவிலான போட்டியை மூன்று கட்டங்களாக நடத்துகின்றனர்.
முதல் முறையாக மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கலந்து கொள்ளும் விதத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நண்பனுக்காக ஒரு கண்டுபிடிப்பு
பெரம்பலூரில் இருந்துவந்த மாணவர்கள் தங்களது சகமாணவர் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அவர் சிரமப்படாமல் நடப்பதற்கு 'ஈசி வாக்கர்' என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளதாக கூறினர்.

''மரத்துண்டுகள், பிவிசி பைப் துண்டுகள், மெருதுவான பஞ்சு ஆகியவற்றைக் கொண்டு எங்கள் நண்பன் ஊன்றி நடக்க 'ஈசி வாக்கர்' சாதனத்தை தயார் செய்தோம். இதைப் பயன்படுத்துவதால் எங்கள் நண்பன் பிறரின் உதவியை எதிர்பாராமல், செயற்கை காலை பொருத்தாமல்கூட நடக்கமுடியும்,'' என்று மாணவர்கள் கோகுல்ராஜ் மற்றும் கிருபாகர் தெரிவித்தனர்.
மின்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் ஆர்வம்
கடலூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் சுகின் பாரதி தனது இரண்டு நண்பர்களுடன் மின் சாதன கழிவுகளை எளிமையாக மீண்டும் பயன்படுத்த செய்வதை புகைப்பட பிரேம்களாக வடிவமைத்துள்ளார். ''பழைய மாடல் கணினி, மொபைல் போன்றவற்றின் திரையைக் கொண்டு புகைப்பட பிரேம்களை வடிவமைத்துள்ளோம். போன், கணினிகளை உடனே தூக்கிப்போடாமல் அவற்றை மீண்டும் எளிமையாக ஒவ்வொருவரும் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இதை உருவாக்கியுள்ளோம்,'' என்றார் மாணவர் சுகின்.
''அரசு பேருந்து இல்லாததால் ஆண்டுக்கு ஒரு கோடி செலவு''
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைப்பகுதியில் இருந்து வந்த பழங்குடி மாணவர்கள் பேருந்துகள் இல்லாததால் மலைவாழ் மக்கள் ஒவ்வொரு நாளும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி ஒரு ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரை செலவுசெய்வதாக தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

''அந்தியூரில் இருந்து கொங்காடு என்ற எங்கள் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,940 பேர் ஒரு வாரம் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளிக்கும், வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வீடுகளுக்கும் திரும்ப, ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும் ரூ.100 செலவு செய்கின்றனர். அதன்படி, ஒரு ஆண்டிற்கு கணக்கிட்டால் சுமார் ஒரு கோடி ரூபாயை அரசு பேருந்து வசதி இல்லாததால் எங்கள் மக்கள் செலவு செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தோம்,'' என்று 'என்று ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மாணவன் ம.சின்னக்கண்ணன் மற்றும் ர.ராஜ்குமார் தெரிவித்தனர்.
அதே ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் தா.நாகராஜ் மற்றும் ச.கார்த்தி மாவட்ட ஆட்சியருக்கு மனுசெய்துள்ளதாகவும் அவர்களின் கண்டுபிடிப்பின் வாயிலாக பேருந்து வசதி எங்கள் கிராமங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதே அவர்களின் இலக்கு என்றும் கூறினார்.
தேசிய அளவிலான இந்தப் போட்டியில் இந்த ஆண்டு கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும் எண்ணிகையில் கலந்துகொண்டனர் என்று பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அமலராஜன் கூறினார்.

''குழந்தைகளிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் ஆய்வுகளை அறிவியல் பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள் கொண்ட குழு சரிபார்த்து மதிப்பெண் வழங்கும். தமிழகத்தில் தேர்வாகும் முப்பது திட்டங்கள் தேசிய அளவில் நடைபெறும் இறுதி தேர்வுக்கு அனுப்பிவைக்கப்படும்,'' என்று அமலராஜன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












