18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: அக்டோபர் 9க்கு வழக்கு ஒத்திவைப்பு
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரன் தரப்பு வழக்கறிஞர் தன் தரப்பு வாதத்தை வைக்க கூடுதல் அவகாசம் கேட்டதால், நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அ.தி.மு.க.வை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தனர்.
இந்த 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இந்த காலகட்டத்தில் டி.டி.வி. அணியிலிருந்த ஜக்கையன் எடப்பாடி அணிக்குச் சென்றார்.
இதனால், மீதமிருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் செப்டம்பர் 14ஆம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் விளக்கமளிக்க கூடுதல் ஆவணங்களைக் கேட்டனர்.
இந்த நிலையில் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதாக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியன்று தமிழக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனை எதிர்த்து தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் இந்த பதினெட்டுப் பேரின் தொகுதியில் தேர்தல் நடத்தவும் இடைக்காலத் தடை விதித்தது.
அந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதிட்டார். இன்று காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து பிற்பகல் வரை நடந்த நிலையில், தனது வாதத்தை முடிப்பதற்காக கூடுதல் அவகாசம் வேண்டுமென அபிஷேக் சிங்வி கூறினார்.

பட மூலாதாரம், TNDIPR
இதையடுத்து வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதுவரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் தேர்தல் பணிகளைத் துவங்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினமாவது இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முடிப்பார்கள் என்று நம்புவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
9ஆம் தேதியன்று அபிஷேக் சிங்வி தம் தரப்பு வாதத்தை முன்வைத்த பிறகு, அரியமா சுந்தரமும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞரான முகுல் ரோஹத்கியும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மற்றொரு வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் வாக்களித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. கொறடா ஆர். சக்ரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 12ஆம் தேதிக்குள் சபாநாயகர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












