ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

பட மூலாதாரம், Getty Images
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அவரை சந்தித்ததாகவும், அவர் இட்லி சாப்பிடுவதாகவும் கூறிய தகவல்கள் முழுவதும் பொய் என்றும் அந்த பொய்களை சொன்னதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலளித்துப் பேசிய டி.டி.வி.தினகரன் தங்களிடம் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும், அதை சசிகலாவின் அனுமதி பெற்றே வெளியிடமுடியும் என்றும் தெரிவித்தார். அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தினகரன் கூறினார்.
மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் அதிமுகவினர் யாரும் அவரை சந்திக்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,''நீங்கள் நம்பவேண்டும் என்று நாங்கள் பல செய்திகளை சொல்லியிருப்போம். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது முழுக்கப் பொய். கட்சியின் ரகசியத்தை காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பொய் சொன்னோம்,'' என்று கூறி தனது கைகளை உயர்த்தி, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
விரைவில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் உண்மையை வெளிக்கொண்டுவரும் என்று சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பதவியை தக்கவைத்துக் கொள்ள இவ்வாறு பேசுகிறார்
இச்சூழலில், கர்நாடகா மாநிலம் கூர்க்கில் உள்ள ஒரு நட்சத்திர வி்டுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சீனிவாசனின் கருத்துகளை மறுத்துள்ளார். நோய்த்தோற்று ஏற்படும் என்பதால் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்க்க மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றார்.
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாகப் பேசிய தினகரன், ''சிகிச்சை தொடர்பான சிசிடிவி கட்சிகள் எங்களிடம் உள்ளன. சசிகலாவின் ஒப்புதலுடன் மட்டுமே சிசிடிவி காட்சிகளை என்னால் வெளியிடமுடியும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடந்தால் அந்தக் காட்சிகளை அளிப்போம். ஆனால், விசாரணை ஆணையத்தை பற்றி எங்களுக்கு பயம் இல்லை. சரியான நேரத்தில் நாங்கள் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோம்,'' என்றார்.
ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து தவறான தகவல்களை சீனிவாசன் பேசுவதாக குற்றஞ்சாட்டிய தினகரன், ''நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் எடப்பாடி ஆட்சி கவிழும் என்ற பயத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். நாங்கள் அதிமுக என்ற கட்சியை காப்பாற்றப் போராடுகிறோம். ஆனால் அவர்கள் பதவியைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்,'' என்றார் தினகரன்.
''சீனிவாசன் தனது பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தற்போது ஜெயலலிதாவை பார்க்கவில்லை என பேசுகிறார். அவர் பேசும் கருத்துக்கள் முரணானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் அவர் இருக்கிறார், அதை தக்கவைக்கவேண்டும் என்பதற்காகவே சீனிவாசன் பல கருத்துகளை அவர் பேசுகிறார்,'' என்றார் தினகரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













