சவால்களுக்கு நடுவில் செயல்படும் சிரியாவின் பெண் சாரணியர் குழு
- எழுதியவர், நலினா எக்கர்ட்
- பதவி, பிபிசி செய்தி
1950களில், சிரியாவில் முதன்முதலில் பெண் சாரணியர் கூட்டங்களை நடத்த துவங்கினர். இந்த வாரம், அந்த குழுவினரை முழுநேர உறுப்பினராக அங்கீகரித்துள்ளது சர்வதேச பெண்கள் சாரணியர் அமைப்பு.

பட மூலாதாரம், Handout
இக் குழுவைச் சேர்ந்த ஷாம், தான் பால் கரக்க கற்றுகொள்ள வேண்டும் என நினைக்கிறார். லண்டன் மற்றும் டமஸ்கஸ் இடையே நடந்த ஸ்கைப் போன் உரையாடலின் போது, அவரது தைரியமான வெடிச்சிரிப்பும் அவருக்கு பண்ணை வேலைகள் மீதுள்ள உற்சாகமும் வெளிப்படுகிறது.
அவர், இதற்கு முன்பே, சிரியாவில் உள்ள ஒரு பண்ணைக்கு தனது பெண்கள் சாரணர்கள் குழுவுடன் சென்றுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, 1.2 கோடி பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட டமஸ்கஸ் மற்றும் ஹாமாவில் பகுதிகளில் இருந்து, அலப்போவிற்கும், கடற்கரைநகரமாக லடாக்கியாவிற்கும் இந்த பெண்கள் சாரணியர் குழு தம் பயணத்தை தொடர்ந்தது.
இயல்பான உணர்வு
சிரிய பெண்கள் சாரணர் அமைப்பில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, "இயல்பான உணர்வை அளித்தும்", "விளையாடவும், நட்பை உருவாக்கவும் பாதுகாப்பான இடங்களை உருவாக்கி வரும் இந்த குழுவின் வியக்கத்தக்க பணிகளை , உலக பெண்கள் சாரண மற்றும் சாரணியர் அமைப்பு பாராட்டியுள்ளது.
தலைநகர் டமஸ்கஸில் வாழும் 22 வயதான ஷாம் கூறுகையில், "எல்லோரும் நாங்கள் மடிந்து வருவதாக நினைக்கிறார்கள். நாங்கள் இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம்" என்கிறார்.
இது பொருத்தமற்றதாகத் தெரியக்கூடும் . காரணம், டமஸ்கஸ் பல தற்கொலை தாக்குதல்களையும், வான் வழி தாக்குதல்களையும் பெற்றதோடு, அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான பல யுத்தங்களை பார்த்துள்ளது.
எந்த போரிலும், நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை பொருத்து, அந்த மோதலின் வீரியம் மாறுபடும். பல நகரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், பல குடும்பங்கள் ஆதரவற்று உள்ள நிலையிலும், இலட்சக்கணக்கான மக்கள் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டாலும் கூட, அரசின் கீழ் உள்ள டமஸ்கஸில், தேநீர் விடுதிகளும், கடைவீதிகளும், வான்வழிதாக்குதலுக்கு இடையேவும் திறந்தே இருக்கும்.
தலைநகரின், நடுத்தர குடும்பங்கள் வாழும் சூழலில் உள்ள ஷாமிற்கு தான் எவ்வளவு பாக்கியசாலி என தெரியும்.

பட மூலாதாரம், Handout
"போர் எங்கள் நாட்டைப் பெரிய அளவில் பாதித்துள்ளது, எனினும் , தனிப்பட்ட முறையில் என்ன அது இன்னும் பாதிக்கவில்லை என்பதற்கு நான் மகிழ்ச்சிகொள்கிறேன்" என்கிறார் அவர்.
"அதற்கு பதிலாக, என்னை அது வலுப்படுத்தியதோடு, வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு உணர வைத்துள்ளது. கல்வி எல்லாவற்றிற்குமான சாவியாக இருக்கும் என்பதை நான் தற்போது அறிவேன் .
"பெண்கள் சாரணர்கள் குழு எனக்கு எல்லையில்லா உதவிகளை செய்துள்ளது. நான் வாழ்க்கையில் வெற்றிபெற்றவராக உணர அதுவும் ஒரு காரணம்"
"சிரியாவை மீண்டும் கட்டமைக்கு முயற்சியில் நான் ஒரு அங்கம் வகிக்கிறேன் ஏனெனில் நான் ஒரு சாரணர்கள் குழுவின் தலைவியாக உள்ளேன்" என்கிறார் ஷாம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், ஷாம் சுடானுக்கு பயணித்து, அங்குள்ள சாரணர் பெண்களுக்கு உடல் மீது கொள்ளவேண்டிய நம்பிக்கை குறித்த பயிற்சி அளித்தார். இந்த திட்டத்தை செயல்பட துவங்கியது முதல், ஒப்பனை செய்துகொள்வதை நிறுத்திய அவர், பிற பெண்களும், தத்தமது உடல்கள் குறித்து பெருமைகொள்ள வேண்டும் என்றார்.
இங்கிலாந்தில் உள்ள சாரணர்கள், பாரம்பரிய ரீதியாகவே கிருஸ்துவத்துடன் சேர்ந்து பணியாற்றுவர். சன்னி முஸ்லிமாக உள்ள ஷாம், தங்களின் உறுப்பினர்கள் பல்வேறு மதங்களில் இருந்து வருவதாகவும், அவர்கள் ஈத் திருநாள் மற்றும் கிருஸ்துமஸ் ஆகிய இரு பண்டிகையையுமே கொண்டாடுவதாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Handout
தனது மதம் குறித்து, "யாருமே கேள்வி கூட கேட்க மாட்டர்கள்", என்கிறார் அவர்.
அரசின் சக்திகளை ஒன்றினைக்க நினைத்த அப்போதைய ஆளும் கட்சி, 1980களில் பெண்கள் சாரணர்களுடன் சேர்த்து பிற இளைஞர்கள் அமைப்புகளுக்கும் தடை விதித்தது.
ரிம் என்னும் பெண்மணி, 6 வயதில் இருந்து இந்த குழுவில் உள்ளார். இந்த இயக்கம் தனக்கு மிக முக்கியம் என கூறும் அவர், பலமுறை, இந்த அமைப்புகளுக்கு இருந்த தடையை மீறி, தேவாலயங்களில், சாரணர் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
2000ஆம் ஆண்டில், பெண் சாரணர்கள் மீதுள்ள தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, ரிம் தற்போது, ஒரு தலைவராகவும், அமைப்பு உறுப்பினராகவும், பயிற்சி வகுப்புகளில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இந்த சாரணர் அமைப்பு, தன்னை ஒரு "வலிமையான, நம்பிக்கை உள்ள பெண்மணியாக" உருவாக்கியுள்ளதாக கூறும் ரிம், தனக்கு கீழ் உள்ள பெண்களையும் அதேபோல உருவாக்க பல சிறப்பு பேச்சாளர்களையும், பெண் தொழிலதிபர்களையும், கூட்டத்திற்கு பேச அழைத்து வருகிறார்.
"சிரியாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெண்கள், தாங்கள் அடைந்திருக்க வேண்டிய இடத்தை இன்னும் அடையவில்லை" என்கிறார் அவர்.
"சமூகம் இன்னும், பெண்கள் முடிவு எடுக்க கூடியவர்களாகவோ, சுதந்திரமாக இருக்க கூடியவர்களோ இல்லை என்றே நினைக்கிறது. நான் ஒரு பெண்ணாக இருந்தாலும், ஒரு தலைவியாகவும், முடிவு எடுக்கும் பொறுப்பிலும், நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் ஆளாக இருக்க முடியும் என மக்களை இணைங்க வைப்பது என்பது கடினமாகவே உள்ளது".
"பெண்கள் தான் வருங்காலத்திற்கான சாவி. அவர்கள், அற்புதமான செயல்களை செய்யும் திறன்பெற்றவர்கள்".
சிரிய பெண் சாரணர்கள் உறுதிமொழி
"கண்ணியத்துடன் உரைக்கிறேன், கடவுளுக்கும், இந்த நாட்டிற்கும் என்னால் இயன்ற கடமைகளை சிறப்பாக செய்வேன், பிற மக்களுக்கு உதவுவதோடு, பெண் சாரணர் சட்டங்களை மதிப்பேன்".

பட மூலாதாரம், Handout
ரிம்மின் நண்பர்கள் சிலர் இறந்து போயுள்ளனர். சிலர் ஊரைவிட்டுப் போக நேர்ந்துள்ளது. எப்போதும் வார இறுதிநாட்களில் மலையேற்றம் போவது போல, சமீபகாலமாக அவரால் போக முடிவதில்லை.
சிரிய பெண் சாரணர் குழு, கேம்ப் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் தங்கப்போகும் இடம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை முன்பே இராணுவத்தினரிடம் கேட்டு உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.
இத்தகைய பிளவுபெற்ற நாட்டில், இந்த அளவிற்கு எல்லோரையும் உள்ளடக்கியதாக இருப்பது என்பது கடினமே. அவர்கள் அரசின் கீழ் உள்ள பகுதிகளில் இயங்குகின்றனர். அவர்களின் நிகழ்ச்சிகளில், தேசிய கொடி, கீதம் மற்றும் தேசிய வாசகம் போன்ற சர்ச்சைக்குரிய குறியீடுகள் அமைந்திருக்கும்.
சாரணர் குழுவில் இணையும் போது, பெண்கள் எடுக்கும் சிரியாவுக்கான உறுதி மொழியிலும், நாட்டிற்கான கடமைகளை செய்வேன் என உள்ளது. அதனால், பாஷர் அல்-அசாத்தின் அரசை எதிர்க்கும் குடும்பத்தினர் தங்கள் பெண்களை இந்த குழுவில் இணைவதற்கு அனுப்பமாட்டார்கள் என்று தோன்றும்.
ஆனால் அவ்வாறு இல்லை என கூறும் ரிம், அரசை எதிர்ப்பவர்கள் கூட, குழந்தைகளை அமைப்பிற்கு அனுப்புகின்றனர் என்கிறார்.
"சாரணர் அமைப்பு என்பது இயக்கம், அரசியல் ரீதியானது அல்ல" என்கிறார் அவர்.
"உறூதிமொழி என்பது நாட்டிற்கானது, எந்த குறிப்பிட்ட அரசிற்கானதல்ல".
"அது நாட்டிற்கானது. சிரியாவிற்கானது"
"நாங்கள் ஒருபோதும் அரசியல் பேசமாட்டோம். கிருஸ்துவர், முஸ்லிம் என எல்லாருக்கும் இந்த அமைப்பு பொதுவானது".
சாரணியர்களுக்கான வழிக்காட்டுதல்கள்.
•பெண் சாரணியர்கள் 5 முதல் 22 வயதுடையவர்களாக இருப்பார்கள்.
•பெண் சாரணியர் குழு 1909 ஆம் ஆண்டு பிரிட்டனில் துவங்கப்பட்டது.
•டமஸ்கஸ் குழு, குளிர்காலங்களில் வாரத்திற்கு ஒரு முறையும், கோடையில், வாரத்திற்கு மூன்று முறையில் சந்திக்கின்றனர்.
•உறுப்பினர்கள் , புதிய உடற் பயிற்சியை கற்றல், புதிய சாகசங்கள் செய்தல், புதிய விஷயங்களை கற்றல் உள்ளிட்ட செயல்களுக்கு அங்கீகார வில்லைகளைப் பெறமுடியும்.
•சாரணர்கள் சீருடைகள் அணிவர்.
•இணை உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மாநாடுகளில் ஓட்டுப் போட உரிமை இல்லை. முழுநேர உறுப்பினர்களுக்கு உண்டு.
•சிரிய குழுக்களை போலவே, அரூபா, அசர்பைஜான் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள குழுவினரும் இந்த வாரத்தில் முழுநேர உறுப்பினர்கள் பதவியை பெறுவர்.
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












