லாஸ் வேகஸ் தாக்குதல் - துப்பாக்கிதாரியா, பயங்கரவாதியா?

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியநிலையில் ஏன் அவரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிடப்படவில்லை என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.
64 வயதான ஸ்டீஃபன் பேடக் குறித்து குறிப்பிடும் செய்தி ஊடகங்கள், அவரை ஒரு 'தனி மனிதர்' என்றும், ஒரு முதியவர் என்றும் 'சூதாட்டக்காரர்' மற்றும் 'முன்னாள் கணக்காளர்' என்று குறிப்பிடுகின்றன. அவரை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இது வலைதளவாசிகள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இத்தகைய தாக்குதலை அவர் நடத்த என்ன காரணம் என தெரியவில்லை. மேலும் அவருக்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது மற்றும் அவருக்கு மன நோய் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில் பேடக் முஸ்லிமாக இருந்திருந்தால் அவர் உடனடியாக பயங்கரவாதி என வரையறுக்கப்பட்டிருப்பார். முஸ்லிம் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் தேவைப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இன, நிற வேறுபாடுகள் என்ற காரணங்களால் அவர் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிரபலங்கள், தொலைக்காட்சி நபர்கள் மற்றும் கல்வியாளர்களும் கூட இது குறித்து விவாதித்துவருகின்றனர்.

பட மூலாதாரம், Twitter
அமெரிக்க நவேடா மாநில சட்ட விதிப்படி பொது மக்களுக்கு பெரும் உடல் தீங்கு அல்லது மரணம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட வன்முறையை பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் பயங்கரவாத செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சட்டத்தில், "உள்நாட்டு பயங்கரவாதம் என்பதை, கூட்டாட்சி அல்லது மாநில சட்டத்தை மீறுகின்ற மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். அதாவது பொதுமக்கள் அல்லது அரசாங்கங்களை அச்சுறுத்துதல் அல்லது ஒடுக்குவதற்கான நோக்கங்கள் என்ற அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.
அரசியல் அல்லது சமூக இலக்குகளை கணக்கில் கொண்டு, அரசாங்கத்தை, பொது மக்களை அல்லது எந்த ஒரு பிரிவையும் அச்சுறுத்துவது அல்லது ஒடுக்குவதற்கான நோக்கமாக இருக்க வேண்டுமென எஃப்.பி.ஐ கூறுகிறது.
வன்முறையில் ஈடுபடுபவர், பெரும் தீங்கை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தை கட்டுப்படுத்த முயல்வது அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தியல் முயற்சியை மேற்கொள்வது என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

லாஸ் வேகஸ் நகரத்தின் தலைமை அதிகாரி ஜோசப் லோம்பார்டோ, பேடக் பற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது "பேடக் எதனால் இப்படி செய்தாரென தெரியவில்லை. அந்த நேரத்தில் அவரது மனநிலை எப்படி இருந்தது என தெரியவில்லை. இப்போது அவர் ஒரு தனி மனிதர் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பலர் நவேடா மாநில சட்டத்தின் வரையறையின் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டு, தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்திய போதிலும், அவர் இவ்வாறு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு பிறகு கடந்த மூன்று நாட்களில் டிவிட்டர் பக்கத்தில் `ஒற்றை ஓநாய்' என்று அடையாளப்படுத்தப்படும் 'லோன் வோல்ஃப்' என்ற வார்த்தை 2 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
இன, நிற வேறுபாடு என்ற விவாதம் தொடங்கிய பிறகு 'பயங்கரவாத தாக்குதல்' என்ற வார்த்தை டிவிட்டர் பக்கத்தில் 1,70,000 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முகநூல் புத்தகத்திலும் இதுகுறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன.
பிபிசி கொள்கைகளின்படி பொதுவாக பயங்கரவாதி அல்லது பயங்கரவாதம் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை. வேறொரு நபரால் அந்த வார்த்தை சொல்லப்படும் போது மேற்கோளிட்டு மட்டுமே காட்டப்படுகிறது.
"பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத செயல் என்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒருமித்த விளக்கம் ஏதும் இல்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது, அடிக்கடி நெறிசார்ந்த முடிவின் அடிப்படையிலேயே அமைகிறது" என பிபிசி கூறுகிறது.
"அது, ஒரு குறிப்பிட்ட செயலின் உண்மைத் தன்மையை அல்லது தீவிரத்தை வெளியிடாமல் தவிர்க்க விரும்புகிறோம் என்று பொருள் அல்ல. ஆனால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், ஆக்கப்பூர்வமான ஊடகத் தொழிலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பரிசீலிக்க வேண்டும்" என்று பிபிசி கொள்கை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா திரும்பிய தோழி

பட மூலாதாரம், POLICE HANDOUT
சமூக ஊடகங்களில் இத்தகைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டீஃபன் பேடக்கின் தோழி என்று கூறப்படும் பிலிப்பைன்ஸை சேர்ந்த மரிலோ டான்லி தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாத்திலிருந்து பிலிப்பைன்ஸிலிருந்து அவர் எங்கும் செல்லவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் அவர் தற்போது தாமாக விசாரணைக்கு முன் வந்து அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டான்லி பேடக் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு முதல் நாள் டான்லியின் வங்கி கணக்கில் அவர் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தியதாக பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் ஏ.ஃப்.பி (AFB) செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












