சிவாஜி கணேசன் சிலையை ஓ. பன்னீர்செல்வம் திறந்துவைப்பார் என அறிவிப்பு

நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் கட்டப்பட்டிருக்கும் மணி மண்டபத்தை, அமைச்சர் திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதைத் திறந்துவைப்பார் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.

சிவாஜி சிலை.

சென்னை அடையாறில் சிவாஜி கணேசனுக்குக் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் தேதியன்று திறந்துவைக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த மணி மண்டபத்தை திறந்துவைப்பார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ பங்குகொள்ளாதது குறித்து தாங்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்தார். சிவாஜி ரசிகர்களும் தி.மு.கவும் இது குறித்து கண்டனங்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் ஒன்றாம் தேதியன்று சிவாஜியின் பிறந்த நாள் என்பதால், மணி மண்டபத்திற்குள் வைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலைக்கு அன்றைய தினம் மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரியதாகவும் அதனால், மணி மண்டபத்தின் பணிகளை விரைவில் முடித்து அதனை அன்றைக்கு திறந்துவைக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார்.

தான் இந்த மண்டபத்தைத் திறந்துவைக்க விரும்பினாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளின் காரணமாக அந்த நிகழ்வில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதே நாளில் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டிருந்ததாலும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை வைத்து இந்த மண்டபத்தை திறந்துவைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

வேண்டுகோளை ஏற்று...

இருந்தபோதும், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மணி மண்டபத்தைத் திறந்துவைப்பார் என்று முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய சிவாஜி சமூக நலப் பேரவையைச் சேர்ந்த சந்திரசேகரன், "இதிலும் எங்களுக்கு திருப்தி இல்லை. இம்மாதிரி ஒரு விழாவில் முதல்வர் கலந்துகொள்ள வேண்டும் என பிறர் வலியுறுத்தாமல் அவரே கலந்துகொண்டிருக்க வேண்டும். இதில் பெருமையோ, சிறுமையோ சிவாஜிக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :