தி.மு.கவினர் மீதான உரிமை மீறல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழக சட்டப்பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்ததாகக் கூறி 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுப்பப்பட்டிருக்கும் உரிமை மீறல் விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

குட்கா விற்பனையாளர்கள் அமைச்சருக்கு லஞ்சம்: சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு

பட மூலாதாரம், MKStalin

தமிழ்நாட்டில் குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் கலக்கப்பட்ட பாக்கு வகைகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது குறித்தும் அதற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பது குறித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேசினர்.

ஜூலை 19-ஆம் தேதி இது தொடர்பாக அவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள், இதற்கு ஆதாரமாக அந்தப் பாக்குகளை சட்டப்பேரவையில் காண்பித்தனர்.

ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்திருப்பதால், அவையின் மாண்பு குலைவதாகக் கூறிய சபாநாயகர் தனபால், விவகாரத்தை உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்தார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழு, இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் சென்னை உயர்நீதின்றத்தை அணுகினர். வழக்கு முடியும்வரை உரிமைக் குழு நோட்டீஸிற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குட்கா விவகாரத்தை சபாநாயகர் உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும் தி.மு.க. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குட்கா விற்பனையாளர்கள் அமைச்சருக்கு லஞ்சம்: சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தி.மு.கவுக்காக ஆஜராகி வாதாடினார்.

"குட்கா பொருட்கள் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில் சபை விதிகள் ஏதும் இல்லை. விதிகளே இல்லாதபோது அதை மீறியதாக கூறுவது எப்படி? தினகரன் அணி பிரிந்துவிட்ட நிலையில், விவகாரம் நடந்து 40 நாட்கள் கழித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால் அதில் வெற்றிபெறவே இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்" என்று கபில் சிபல் வாதிட்டார்.

பேரவைச் செயலர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், வழக்கை செப்டம்பர் 14க்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உரிமைக்குழுவுக்கு அறிவுறுத்துகிறேன் எனக் கூறினார்.

மீண்டும் வழக்கு விசாரணைக்குவரும் வரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உரிமைக் குழுவுக்கு அறிவுறுத்துவதாக பேரவைச் செயலர் தரப்பு உத்தரவாதமளித்துள்ளதால், இந்த வழக்கு விசரணைக்கு உகந்ததா என்ற விசாரணைக்காக செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :