அனிதாவின் மரணத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தற்கொலைசெய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து, மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க தமிழக சுகாதாரத் துறை முடிவுசெய்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக வாதிட உச்ச நீதிமன்றம் வந்திருந்த அனிதா.

மருத்துவராக ஆவதே தனது லட்சியமாக கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், மாணவர்களுக்கு உடனடியாக மன ஆலோசனை வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் சுகாதாரத் துறையின் முயற்சி சரியானது என்றாலும் அது காலம்தாழ்த்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்றும், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்னையை திசைதிருப்பும் முயற்சி இது என்றும் சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் கடுமையாக உழைப்பதாகவும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்தார்.

''தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுரிகளில் 3,500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை பெற ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது நீட் தேர்வு கட்டாயம் என்பதால் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று அவர் கூறினார்.

''அனிதா போல கடும் மனஉளச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை காப்பாற்ற உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்க முடிவெடுத்துள்ளோம்,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

காணொளிக் குறிப்பு, neet

மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைப்பது மட்டுமல்லாமல், சமீப காலங்களில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுக்காமல் இருப்பது, ப்ளூ வேல் போன்ற இணைய விளையாட்டுகள் போன்றவை மாணவர்களை அதிகம் பாதித்துள்ளது என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, மாணவர்களிடம் மாற்றம் தென்பட்டவுடன் அவர்கள் மீது கவனம் செலுத்த வழிவகை செய்யப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நம்பிக்கை ஏற்படுத்தாமல் மன நல ஆலோசனையில் என்ன பயன்?

நீட் தேர்வு குழப்பம் உட்பட மாணவர்களின் பிற பிரச்சனைகள் குறித்து அரசு அக்கறை செலுத்தும் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்துவதை விடுத்து மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்குவதில் என்ன பயன் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

''அனிதாவின் மரணத்தை அடுத்து நீட் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், மாணவர்களை சரிப்படுத்துகிறோம் என்பதை எப்படி ஒத்துக்கொள்வது? மாணவர்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பதை முதலில் செய்யவேண்டும்,'' என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

''குறைந்தபட்சம் மாணவர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களை முடக்காமல் இருந்தால், தனக்கு பிரச்சனை வந்தால் ஆதரவாக பலர் குரல் கொடுப்பார்கள் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்,'' என்று பிரின்ஸ் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :