அனிதா மரணம்: திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு?
நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தற்கொலைசெய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நீதி வேண்டி திங்கள்கிழமை (செப் 4) திமுக நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிமுகவினர் கலந்துகொள்வார்கள் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AIADMK
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மாணவர்கள் நலன் கருதி அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
''அனிதாவின் மரணத்திற்கு காரணமான முதல்வர் எடப்படி பழனிச்சாமி, சுகாதார அமைச்சர் ஆகியோர் பதவி விலகவேண்டும். அவர்கள் அனிதா போன்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு இருக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தனர். திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எங்கள் இயக்கத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்,'' என்றார் திவாகரன்.
திமுக நடத்தவுள்ள கூட்டத்திற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அழைப்புவிடுக்காமல் இருக்கும் பட்சத்தில், திவாகரனின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் நடைபெற்ற மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்பது தொடர்பாக பேசவுள்ளதாக தெரிவித்தார்.

அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோர நடவடிக்கை எடுக்கமுடியுமா என்று ஆலோசனை செய்ய அந்தக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே, திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியதை தினகரன் மறுத்துள்ளார்.
பெரம்பலூரில் பேசிய அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன், திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், நீட் தொடர்பாக திமுக நடத்தும் கூடத்தில் அதிமுகவினர் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் அணியினர், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரனின் ஆதரவாளர்கள் 19 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்துவந்தனர். அவர்கள் புதுச்சேரியில் ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













