சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை வட கொரியா உருவாக்கியுள்ளதா? புதிய படங்களால் பரபரப்பு
மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters/KCNA
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை சோதனை செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்த கூற்றுகளை தன்னிச்சையான முகமைகள் எதுவும் இதுவரை உறுதிசெய்யவில்லை.

பட மூலாதாரம், KCNA
அணு ஆயுத திறன்கள் மற்றும் செயல்பாடுகளில் வட கொரியா முன்னேறியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ள போதிலும், ஏவுகணை மீது ஏற்றிச்செல்லும் அளவு ஒரு சிறிய அணுஆயுதத்தை வெற்றிகரமாக வட கொரியா உருவாக்கியுள்ளதா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.
ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
நாட்டின் அணுஆயுத நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகளை சென்று பார்த்த கிம் ஜோங்-உன், அணுஆயுத தயாரிப்பு தொடர்பான பணிகள் தொடர்பான வழிகாட்டுதலில் பங்கேற்றதாக வட கொரிய அரசு செய்தி முகமையான கே சி என் ஏ தெரிவித்துள்ளது.
தொடர்பான செய்திகள்:
அண்மைய மாதங்களில் பல ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஜப்பானும், மற்ற பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு பதிலளித்த வட கொரியா, ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












