பன்றிக் காய்ச்சல்: இந்த ஆண்டு இந்தியாவில் 1094 பேர் பலி

கடந்த எட்டு மாதங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் இந்தியாவில் 1094 பேர் உயிரிழந்துள்ளனர். 22,186 பேர் நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தாக்குதலுக்கு அஞ்சி மூக்கை மூடிக்கொண்டுள்ள பெண் போலீஸ்காரர்

பட மூலாதாரம், AFP

அதிகபட்சமாக, கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 342 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். எனவே பன்றிக் காய்ச்சல் மீண்டும் கொள்ளை நோயாக உருவெடுக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டில் இதே காலகட்டம் வரையில் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கையைப் போல நான்கு மடங்கு மரணங்கள் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரம் இந் நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு 437 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 297 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

2009-10 ஆண்டுகளில் இந் நோயால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2700 பேர் பாதிக்கப்பட்டனர். 2016-ம் ஆண்டில் இந் நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு முழுவதிலும் 1,786 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது அவர்களில் 265 பேர் உயிரிழந்தனர்.

தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைக்கு வரும் பன்றிக் காய்ச்சல் நோயாளிகள் குறித்த புள்ளிவிவரங்களை அரசுக்குத் தரவேண்டியது கட்டாயம் இல்லை என்பதால், அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று சஞ்சய் குருராஜ் என்ற மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :