பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய திமுக கோரிக்கை

M.K.STALIN

பட மூலாதாரம், M.K.STALIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று பரோலில் விடுவிக்கப்பட்டதையடுத்து அவரை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு அவருக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு அளித்து உத்தரவிட்டதையடுத்து அவர் சிறை நடைமுறைகள் முடிவடைந்து நேற்றிரவு வெளியே வந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவிக்க தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம்" என்றார்.

தமிழக சட்டமன்றத்தில் பேராறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான பல கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடந்த காலங்களில் விடுத்து வந்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சிறையில் தண்டனை காலத்துக்கு பிறகும் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை நிரந்தரமாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அதன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசு தலைவரை சந்தித்து முறையிடுவோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்றார் ஸ்டாலின்.

twitter

பட மூலாதாரம், Twitter

முன்னதாக, சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பேரறிவாளன் வருகையையொட்டி அவரை காண்பதற்காக அந்த பகுதியில் இருந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர். சில உள்ளூர்வாசிகள் பேரறிவாளனுக்கு ஆரத்து எடுத்து வரவேற்றனர்.

அவரது நடமாட்டங்களை கண்காணிக்க தமிழக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :