'என் கருத்துக்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது'
சிபிஐ மற்றும் பிற சில அரசு முகமைகளை பயன்படுத்தி, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தையும், அவரது நண்பர்களையும் மத்திய அரசு குறி வைக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ப. சிதம்பரம் வசித்து வந்த இல்லம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய இடங்களில், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் நூற்றுக்கணக்கான சூழல்களில் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு அமைப்பில் ஐந்து செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பாளர்கள். அவர்கள் மீதோ, நிதி அமைச்சராக இருந்த என்மீதோ குற்றச்சாட்டு இல்லை என்று ப. சிதம்பரம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த ஐந்து செயலாளர்கள் வழங்கிய பரிந்துரைகளின்படிதான், சட்டத்திற்கு உட்பட்டு, ஓவ்வொரு முதலீட்டுக்கும் அனுமதி மற்றும் அனுமதி மறுப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்ட ப. சிதம்பரம், ஆனால், மத்திய அரசு, சிபிஐ மற்றும் பிற அரசு முகமைகளை பயன்படுத்தி எனது மகன் மற்றும் அவரது நண்பர்களை குறிவைத்து செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

''என் கருத்துக்களை ஒடுக்க நினைப்பதும், மற்றும் நான் எழுதுவதை தடுக்க வேண்டும் என்பதும்தான் அரசின் நோக்கம்'' என்று ப. சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
''மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், உள்ளிட்டவர்களிடம் கையாண்ட நடைமுறையை என்னிடமும் அரசு கையாளுகிறது. ஆனால், நான் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன்'' என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் ஃபெமா சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்திற்கும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் இந்த சோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் நடந்து வருகின்றன.
இதையும் படிக்கலாம் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












