பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது இந்திய சிறுமி கருக்கலைப்பு மனு
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யக் கோரிய மனுவை பரிசீலிக்க இந்திய மருத்துவர் குழு ஆலோசனை நடத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வளர்ப்புத் தந்தையால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சிறுமி, இன்னும் நான்கு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இருப்பதாக ரோதக் நகர வடக்குப் பகுதி காவல்துறை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்திய சட்டங்களின்படி, பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற சூழ்நிலையைத் தவிர, இருபது வாரத்தை தாண்டிய கருவை கலைக்க முடியாது. சிறுமியின் கருக்கலைப்புக் கோரிக்கை பற்றிய முடிவு, தற்போது நீதிமன்றத்திடம் உள்ளது.

இந்தியாவில், பாலின விகிதாசாரத்தை சமமாக வைக்கும் நோக்கில் கருக்கலைப்பு தொடர்பான கடுமையான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள், பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு, லட்சணக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது..
கடந்த சில மாதங்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, கருவுற்ற சில பெண்கள், கரு இருபது வார வளர்ச்சியடைந்த நிலையில் கருக்கலைப்பு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற மனுக்கள் குறித்து மருத்துவ நிபுணர்களிடம் நீதிமன்றம் கருத்து கேட்பது வழக்கமான நடைமுறை.
அண்மையில் ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்றுள்ள இந்த பாலியல் வல்லுறவு வழக்கில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற குடும்பத்தின் கோரிக்கையை, மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியைச் சேர்ந்த (பி.ஜி.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் கூடி பரிசீலித்தனர்.

சிறுமி கருவுற்றிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
"காவல்துறையினரும், அதிகாரிகளும் நீதிமன்றத்திடம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யலாமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் அஷோக் செளஹான் பிபிசியிடம் கூறினார்.
இந்த வழக்கில் கருக்கலைப்பு என்பது "வரம்புக்கு உட்பட்டது" என்று அவர் மேலும் கூறினார்.
"சிறுமி சுமார் 20 வார கருவை சுமக்கிறார், அது 19 வாரம் அல்லது 21 வாரக் கருவாகவும் இருக்கலாம். கருவின் வளர்ச்சி எந்த வாரத்தில் உள்ளது என்பதை துல்லியமாக தெரிவிக்கும் தொழில்நுட்பம் இல்லை என்று அவர் கூறினார்."
பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சியூட்டும் காணொளி
வீட்டு வேலை செய்யும் சிறுமியின் தாய், தனது பத்து வயது மகள் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது தாய் வேலைக்கு சென்றிருக்கும்போது, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, தாயின் இரண்டாவது கணவர், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்ததாக சிறுமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியின் தாய், தனது கணவரின் பேரில் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோதக் காவல்துறை அதிகாரி பங்கஜ் ஜெயின் பிபிசியிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













