மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்
நுற்றுக்கணக்கான அழைப்புகள், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள், வாட்ஸ்ஆப் மூலம் தகாத செய்திகள் என்று தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

பட மூலாதாரம், JOTHIMANI
செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்ட பிறகு, இணையத்தில் தன் மீதான பாலியல் தாக்குதல் தொடங்கியது என்கிறார்.
முகநூலில் தன்னை மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியவர்கள், பாலியல் ரீதியாக கருத்துக்களை பதிவிட வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியவர்கள், அவர்கள் பகிர்ந்த செய்திகள் என்று முகநூலில் ஒரு கருத்தை டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். ''நான் பாதிக்கப்பட்டாலும், இதை தொடங்கி வைத்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும். பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அருவருக்கத்த வகையில் நடந்து கொண்டனர். இது குறித்து பிரதமர் மோதிக்கும், அமித்ஷா மற்றும் தமிழக ப.ஜா.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் கடிதம் அனுப்பிவிட்டேன். எந்தப் பதிலும் இதுவரை இல்லை,'' என பிபிசியிடம் தெரிவித்தார் ஜோதிமணி.
இந்த சம்பவம் குறித்து சைபர் குற்ற தடுப்பு பிரிவிடம் ஒரு புகாரை அவர் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், JOTHIMANI
பாஜகவின் ஐ.டி (IT- information technology) பிரிவில் பணிபுரிந்த சாத்வி கோஸ்லா என்ற நபர் சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு செய்திகளை பரப்பும் வேலை தனக்கு அளிக்கப்பட்டதாகவும், அதை விரும்பாமல் அதில் இருந்து விலகியதாகவும் ஐ ஏம் எ டிரால் (I Am A Troll) என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார் என்ற ஜோதிமணி, அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார்.
ஜோதிமணியின் புகார் குறித்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், ''ஜோதிமணி சந்தித்த இணைய வழியான பாலியல் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த செயல்களில் ஈடுபட்டவர்களாக இருந்தால் அவர்களை கண்டிக்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்,'' என்றார்.

பட மூலாதாரம், TAMILISAI
ஜோதிமணியின் புகாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், தனது கட்சியினர் மட்டும் தான் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக சொல்வது தவறு என்கிறார் தமிழிசை.
''ஜோதிமணி பிரதமர் மோதியைக் கண்டித்து எழுதிய விதத்தால் சிலர் கோபமுற்று இது போல நடந்திருக்கலாம். அவற்றை சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எல்லோருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்று சொல்வது தவறு,'' என்றார்.
அவர் மேலும், ''பாஜகவினர் இதுபோல அவதூறு பரப்புவதற்காக ஒரு படையை வைத்துள்ளனர் என்றும் அதற்காக பயிற்சி தரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது. எங்களது கட்சி மிக நாகரீமான கட்சி,'' என்றார்.
ஜோதிமணி சந்தித்த இணைய பாலியல் தாக்குதலை போலவே ஒரு தாக்குதலுக்கு ஆளானதாகவும், தான் தொடுத்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிறார் பத்திரிகையாளர் கவின்மலர்.
''நான் முகநூலில் எழுதிய கருத்துக்களுக்கு தொடர்ந்து மோசமான முறையில் கருத்து தெரிவித்தது, என்னை தகாத வார்த்தைகளால் சித்தரித்ததை அடுத்து நான் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகும் கூட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை,'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
''முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றத்தை அணுக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்கிறார் கவின்மலர். ''காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், என் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இது குறித்து ஒரு ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். நீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அடுத்த நகர்வு இதுவரை இல்லை,'' என்றார்.
தமிழகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டாலும், அவை அனைத்துமே வழக்காக பதிவு செய்யப்படுவதில்லை என்கிறார் தமிழக காவல் துரையின், சைபர் குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றிய முன்னாள் உதவி கண்காணிப்பாளர் பாலு. இதற்கு முதல் காரணம் காவல் துறையினருக்கு போதிய பயிற்சி இதில் இல்லை என்றும் மாவட்ட தலைமை அலுவலகம் மற்றும் மாநில தலைமை அலுவலகத்தில் மட்டும் தான் புகார்கள் பதிவு செய்யப்படும் நிலை தொடர்வது தான் காரணம் என்கிறார்.
''அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை பதிவு செய்யுமாறு சட்டம் இருந்தாலும் நடைமுறையில் அது நடப்பதில்லை. சில சமயம் புகார் கொடுப்பவர்களே பின்வாங்குவதும் நடக்கிறது,'' என்கிறார்.












