இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையம் விசாரணை

அ.இ.அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் சசிகலா பிரிவுக்கா, ஓ. பன்னீர்செல்வம் பிரிவுக்கா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது தில்லியில் இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்டு வருகிறது.

இரட்டை இலை

பட மூலாதாரம், Getty Images

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சில காலம் முதலமைச்சராக இருந்துவந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி முதல்வராகத் தேர்வுசெய்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துசென்றனர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் சென்றனர்.

இதையடுத்து சசிகலா பிரிவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். தமிழக சட்டப்பேரவையில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதும் நிரூபிக்கப்பட்டது.

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் தொண்டர்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்றும் சசிகலா நியமனம் பொதுக்குழு உறுப்பினர்களால் நியமனம் செய்யப்பட்டிருப்பதால், அவர் பொதுச்செயலாளராக இருப்பது செல்லாது என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில்,ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியாக உள்ள அவரது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.கவின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத்தான் தரப்பட வேண்டுமென இருதரப்பும் கோரிவருகின்றன.

இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க, இருதரப்பும் தங்கள் வாதங்களை இன்று முன்வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் இரு தரப்பும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஸைதி முன்னிலையில் ஆஜராகினர்.

சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, மோகன் பராசரன், அரிமா சுந்தரம் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகினர்.

பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்களான வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் மற்றும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகினர்.

இருதரப்புக்கும் முதல் கட்டமாக 90 நிமிடங்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலாவதாக தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த பன்னீர்செல்வம் தரப்பு, சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டதே செல்லாது என்பதால் அவர் அ.தி.மு.கவின் வேட்பாளரையே தேர்வுசெய்ய முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், 122 சட்டமன்ற உறுப்பினர்கள், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தரப்பிலேயே இருப்பதாக சசிகலா தரப்பு வாதிட்டது.

தற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இருதரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்துவருகின்றன.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நாளைக்குள் அதாவது மார்ச் 23ஆம் தேதிக்குள் தாக்கல்செய்யவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்