கோவையில் திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் கொலை
கோவை நகரில், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் ஃபரூக் என்பவர், வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் போலீசார் தன்னை சந்தேகிப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஃபரூக் (31) , திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு சுமார் 11 மணிக்கு வீடு திரும்பிய அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதையடுத்து, அவர் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
உக்கடம் கழிவுநீர் பண்ணை சாலையில் சென்றபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்துப் பேசிய நபரது எண் குறித்து விசாரித்தபோது, அது வேலூர் வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவரது எண் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த அர்சர்த் (32) என்பவர், நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திராவிடர் விடுதலைக் கழகத்தில், தீவிரமாகக் செயல்பட்டு வந்த ஃபரூக், தனது முகநூல் பக்கத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் குறித்து தீவிரமான பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்ததாகவும், அதற்கு இஸ்லாமியர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












