மலேரியா தடுப்பு மருந்துக்கு சாதகமான சமிக்ஞை
ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுவதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்னதாக மலேரியாவுக்கான முதலாவது தடுப்பு மருந்து ஒழுங்குபடுத்துனர்களின் இறுதிக்கட்ட சோதனைகளில் ஒன்றில் தேறியுள்ளது.

பட மூலாதாரம், Thinkstock
இந்த மருந்தின் பாதுகாப்புத் தன்மை மற்றும் செயற்திறன் குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் அறிவியல் ரீதியாக சாதகமான கருத்தைக் கூறியுள்ளது.
கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மொஸ்கியூரிக்ஸ் என்னும் ஊசி மருந்துக்கு இது ஒரு பெரும் சாதகமான சமிக்ஞை.
உலக சுகாதார நிறுவனம் இதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து இந்த வருட பின்பகுதியில் ஆராயும்.
உலகெங்கும் மலேரியா ஆண்டு ஒன்றுக்கு 584,000 பேரை பலிகொள்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளாவர்.
குழந்தைகளுக்கு இந்த மருந்து பலன் தராது என்பதால் இதனை பரிந்துரைக்கலாமா என்று உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.








