COP26: 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஐநா செயலர் குட்டெரெஷ்

காலநிலை மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலநிலை மாநாடு

கிளாஸ்கோவில் நடந்து வரும் COP26 காலநிலை மாநாடு இறுதி நாளை எட்டியுள்ளது. இருப்பினும் புவியின் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தப்படாமல் போவதற்கான வாய்ப்பில்லையோ என்கிற அச்சம் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஷ் அசோசியேட்டட் பிரஸ் முகமையிடம் காலநிலை இலக்கு ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

போதுமான அளவுக்கு கார்பன்டை ஆக்சைட் உமிழ்வைக் குறைக்க, உலக நாடுகளின் அரசாங்கங்கள் தேவையான வாக்குறுதிகளைச் செய்வதை உச்சிமாநாட்டில் காண முடியாமல் போகலாம் என்று அவர் கூறினார்.

காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா, இந்தமாநாடு முடிவதற்குள் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலம் ஓடிக் கொண்டிருக்கிறது என முன்பே எச்சரித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவது மனிதகுலம் மோசமான காலநிலை தாக்கங்களைத் தவிர்க்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொழில்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையுடன் ஒப்பிடப்படுகிறது.

பசுமையில்ல வாயு உமிழ்வைக் குறைப்பதன் மூலம் பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 முதல் 2.0 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த உலக தலைவர்கள், 2015 பாரிஸ் மாநாட்டில் உறுதியளித்தனர். சமீபத்திய கணிப்புகள் புவியின் வெப்பநிலை உயர்வு 2.7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறுகிறது.

உலக நாடுகள் புதைபடிம எரிபொருட்களில் தொடர்ந்து முதலீடு செய்யும் போது உமிழ்வைக் குறைக்கும் வாக்குறுதிகள் அர்த்தமற்றவை என ஐநா பொதுச் செயலர் குட்டெரெஸ் எச்சரித்தார்.

"புதைபடிம எரிபொருள் துறை இப்போதும் பல டிரில்லியன் அளவுக்கு மானியங்களைப் பெற்று வரும்போது வாக்குறுதிகள் அர்த்தமற்றதாகின்றன," என அவர் கூறினார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலநிலை மாற்றம்

கிளாஸ்கோவில் இதுவரை செய்யப்பட்டுள்ள அறிவிப்புகள் "போதுமானவை" என்றும் அவர் கூறினார், மேற்கொண்டு "என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்." எனவும் கூறினார்.

பிரிட்டன் நேரப்படி மாலை 18:00 மணியோடு காலநிலை மாநாடு நிறைவடைய உள்ளது. எனவே அதற்குள் முக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண, பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா.

"1.5 டிகிரி செல்சியசுக்குள் பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தும் இலக்குக்கான காலம் குறைந்து கொண்டே வருகிறது, இருப்பினும் இலக்கை அடைய இன்னும் வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.

கார்பன் சந்தைகள் மற்றும் நாடுகள் எவ்வாறு தங்களின் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை சமநிலைப்படுத்துகின்றன என்பதைப் பற்றிய விவகாரத்தில் (ஆர்டிகல் 6ல்) கூடுதலாக வேலை செய்ய வேண்டியுள்ளது என அலோக் கூறினார்.

COP26 காலநிலை மாநாட்டில் லட்சிய செயல்திட்டத்தைப் நிறைவேற்றும் முயற்சிகளை, உலகின் சில முக்கிய கார்பன் உமிழும் நாடுகள் சிதைப்பதாக குற்றம் சாட்டினார் முன்னாள் அயர்லாந்து அதிபர் மற்றும் காலநிலை தொடர்பான மூத்த அரசியல் தலைவர்கள் குழுவின் தலைவருமான மேரி ராபின்சன்.

நிலக்கரியை படிப்படியாக அகற்றுவது அல்லது புதைபடிம எரிபொருட்களுக்கு அரசாங்க மானியங்களைக் குறைப்பது தொடர்பாக கிளாஸ்கோவின் இறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுவதை தடுக்க ரஷ்யா மற்றும் செளதி அரேபியா கடுமையாக முயற்சிப்பதாக அவர் அசோசியேட்டட் பிரஸ் முகமையிடம் கூறினார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலநிலை மாற்றம்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்துக்குப் பிறகு COP26தான் மிகப்பெரிய காலநிலை மாநாடாகும். 2030க்குள் புவி வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க, சுமார் 200 நாடுகளிடம் திட்டங்கள் கேட்கப்படுகின்றன.

ஒரு சிறிய நாடுகள் குழு, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை படிப்படியாக நிறுத்த, வியாழனன்று ஒரு கூட்டணியை அறிவித்தன. Beyond Oil and Gas Alliance (BOGA) என்றழைக்கப்படும் டென்மார்க் மற்றும் கோஸ்டாரிகாவின் தலைமையிலான அக்கூட்டணியில், பிரான்ஸ், வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. ஆனால் பிரிட்டன் அக்கூட்டணியில் இணையவில்லை.

வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்கிற அமெரிக்கா மற்றும் சீனாவின் அறிவிப்பை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் வரவேற்றனர், ஆனால் பிரசாரகர்கள் இரு நாடுகளும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதற்கிடையில், கானா, எத்தியோப்பியா, வங்கதேசம், துவாலு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் காலநிலை மாற்ற மாநாட்டில் முன்னேற்றம் ஏற்படுவதை அமெரிக்கா தடுப்பதாகக் கூறி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். காலநிலை நிதி தொடர்பான ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் கவலைகளை அமெரிக்கா நிராகரிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :