கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு அதிக ஆபத்தில்லை - ஆறுதல் தரும் புதிய தகவல்

குழந்தைகளுக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் இறப்பது மிகவும் குறைவு என சமீபத்தைய கொரோனா தரவுகள் பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு முதல் 12 மாதங்களில் இங்கிலாந்தில் 18 வயதுக்குக் குறைவானவர்களில் 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் தான் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக குழந்தைகளுக்கு கொரோனாவால் ஏற்படும் ஆபத்துகள் குறைவாகவே இருக்கின்றன.

இந்த முடிவுகளை, பிரிட்டனின் தடுப்பூசி ஆலோசனைக் குழு கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வழக்கம் போல தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை. அவர்களுக்கு மற்ற சில நோய்களால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

உலகின் வேறு எந்த நாட்டை விடவும் குழந்தைகளைக் குறித்து தாங்கள் நடத்திய ஆய்வுகள் மிகவும் விரிவானவை என யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள், யார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரிஸ்டல் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவர்கள் இங்கிலாந்தின் பொது சுகாதார தரவுகளைக் கண்ட போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த இளம் வயதினர்களில் பெரும்பாலானோருக்கு சில உடல் நலக் கோளாறு இருந்தது தெரிய வருகிறது. அதன் விவரம்:

குழந்தைகளுக்கு கொரோனா

பட மூலாதாரம், UCL

1. சுமார் 15 பேர் வாழ்நாளைக் குறைக்கும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் கடுமையான நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களும் அடக்கம்.

2. ஆறு பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த வித நோய்களும் இல்லை. இருப்பினும் அவர்களின் நோய் குறித்த விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

3. 36 குழந்தைகள் இறந்த போது அவர்களுக்கு கொரோனா இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அவர்களின் மரணத்துக்கு கொரோனா காரணமல்ல, மற்ற உடல் நலக் குறைவுகள் தான் காரணம் என பகுப்பாய்வு கூறுகிறது.

4. எனவே, கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், கருப்பினம் மற்றும் ஆசிய இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆக, 12 மில்லியன் குழந்தைகள் வாழும் இங்கிலாந்தில் 25 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்பதால், இறப்பு விகிதத்தை ஒரு மில்லியன் குழந்தைகளில் இருவர் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிரிட்டனில் கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பாசிட்டிவ் என வந்த 28 நாட்களுக்குள் 1,28,301 பேர் இறந்திருக்கிறார்கள் என தரவுகள் கூறுகின்றன.

மருத்துவமனையில் அனுமதி

முகக்கவசத்துடன் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்தில் பிப்ரவரி 2021 வரை, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

5,800 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 250 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.

690 குழந்தைகளுக்கு கொரோனா உடன் தொடர்புடைய அரிதான அழற்சி சார் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அதை ஆங்கிலத்தில் paediatric inflammatory multisystem syndrome என்று அழைக்கிறார்கள்.

பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் குழந்தைகள், உடல் பருமன், இருதயக் கோளாறு, நரம்பியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் இளம் வயதினர் ஆகியோர் தான் அதிக ஆபத்தில் இருக்கின்றனர் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிக்கலான முடிவுகளை எடுக்க பல இடங்களில் இருந்து தரவுகள் தேவைப்பட்டன என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரஸ்ஸல் வினர்.

முகக்கவசத்துடன் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

ஒருவேளை போதுமான தடுப்பூசிகள் இருக்கிறது என்றால், சில பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என பரிந்துரைத்து இருக்கிறது இவர்களின் ஆய்வு.

"என்னைப் பொருத்தவரை, நாங்கள் திரட்டிய தரவுகளின் படி, நாங்கள் ஆராய்ந்த குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. அவர்கள் இறப்பதற்கு வாய்ப்பு குறைவு என்கிற போதிலும், அவர்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் என்பதையும் நாம் அறிவோம்."

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யும் போது இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

அவர்கள் மருத்துவமனையில் தீவிரமாக உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது ஊக்கமளிக்கிறது என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த மருத்துவர் எலிசபெத் விட்டேகர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :