அட்லான்டா துப்பாக்கி சூடு: 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் பலி - என்ன நடந்தது?

துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள மூன்று வெவ்வேறு மசாஜ் ஸ்பா நிலையங்களில் புதன்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு அட்லான்டாவின் புறநகரில் உள்ள எக்வொர்த் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக நபர் கைதாகியிருப்பதாகவும் அவரே மூன்று இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கான பின்னணி அல்லது உள்நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரம் ஆன அதே சமயம், அங்கு வைரஸ் பரவலுக்கு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களே காரணம் என்ற வகையில் வெறுப்புணர்வு பிரசாரத்தை சிலர் முன்னெடுத்தனர். அதற்கும் தற்போதைய சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் தெளிவாகவில்லை.

இதற்கிடையே, உயிரிழந்த பெண்களில் நான்கு தங்கள் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தென் கொரியா தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் நடந்த தாக்குதல்

அட்லான்டா

முதலாவது துப்பாக்கி சூடு, செக்ரோக்கீ பகுதியின் அக்வொர்த் என்ற இடத்தில் உள்ள யங் ஏஷியன் மசாஜ் பார்லரில் நடத்தப்பட்டது. அங்கு சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இருவர் உயிரிழந்ததாகவும் உள்ளூர் காவல்துறை செய்தித்தொடர்பாளர் கேப்டன் ஜே. பேக்கர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இருவர் ஆசியர்கள் என தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்களில் இருவர் வெள்ளையின பெண் மற்றும் ஆண். மற்றொருவர் ஸ்பெயின் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கேள்விப்பட்டு அங்கு சென்ற அதே சமயம், வடகிழக்கு அட்லான்டாவின் மற்றொரு இடத்தில் உள்ள கோல்டு ஸ்பா என்ற பார்லரில் வழிப்பறி நடப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

அங்கு மூன்று பெண்கள் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த நிலையில் இறந்து கிடந்ததை பார்த்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல சாலையின் மற்றொரு புறத்தில் இருந்த அரோமாதெரபி ஸ்பாவுக்குள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததாக கருதப்படும் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அட்லாண்டா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, காவல்துறை கைது செய்துள்ள சந்தேக நபர்

சம்பவ பகுதிகளில் இருந்து கிடைத்த சிசிடிவி காணொளியை வைத்து, சந்தேக நபரான ராபர்ட் ஆரோன் லாங் என்பவரை தெற்கு அட்லான்டாவின் கிறிஸ்ப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபர் ஜோர்ஜாவின் வுட்ஸ்டாக் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த நபர்தான் மூன்று இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேண்டும் என தான் வலுவாக நம்புவதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் கேப்டன் பேக்கர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நடந்த சம்பவத்தை விவரிக்க முடியாத துயரம் என்று ஆசிய அமெரிக்கர்களுக்கான உரிமைகள் தொடர்புடைய ஸ்டாப் ஏபிபிஐ ஹேட் என்ற அமைப்பு அழைத்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

துப்பாக்கி சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அட்லான்டாவில் உள்ள வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

நடந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிய வம்சாவளியினர் வாழும் பகுதிகளில் காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள் என்று நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :