தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 `டிடிவி தினகரனால் அ.தி.மு.க - பா.ஜ.க 100 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்!': பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் கணக்கு

பட மூலாதாரம், PETER ALPHONSE
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அ.ம.மு.க பொதுச் செயலாளரான தினகரனின் தேர்தல் வியூகம் குறித்தும் அவருக்கான வாய்ப்புகள் குறித்தும் சில கூட்டல், கழித்தல் கணக்குகளை தனது ட்விட்டர் பதிவின் வாயிலாக பகிர்ந்திருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்.
`தினகரன் மீது திடீர் பாசம் ஏன்?' என்பது குறித்தெல்லாம் பிபிசி தமிழுக்காக பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.
கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் 60 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்களைத் தவிர்ப்பது நல்லது என அறிவுரை கூறினீர்கள். உங்கள் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டதா?
``தேர்தல் அறிவிப்பு வந்த அன்றே நான் இது குறித்துப் பதிவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து கட்சிகளுக்கும் அந்த கோரிக்கையை வைத்தேன். என்னுடைய கோரிக்கையை அனேகமாக ஏற்றுக் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய தலைமுறையைச் சார்ந்த நண்பர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது முடிந்து விட்டதாகவே கருதுகிறேன். கடைசியாக என்னோடு சட்டமன்றத்தில் இருந்தது கே.ஆர்.ராமசாமி மட்டும்தான். தற்போது அடுத்த தலைமுறை உள்ளே வந்திருப்பதாக பார்க்கிறேன். என் கோரிக்கை 100 சதவிகிதம் ஏற்கப்படவில்லையென்றாலும் ஓரளவுக்கு அந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது."
தி.மு.க அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்த முரண்பாடுகளும் மோதல்களும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இல்லை. சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளிலும் இதனைப் பார்க்கிறோம். மிகவும் ஒழுக்கமானவை எனக் கருதக் கூடிய கட்சிகளில்கூட குமுறல்கள் வெடித்துள்ளன. பா.ஜ.கவிலும் பல இடங்களில் அலுவலகங்களை பூட்டியிருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் கட்சியை பழைய சூழலோடு இன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பது தவிர்க்க முடியாதது. அந்தவகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் என்பது சற்றுக் குறைவானதுதான்.
இருந்தாலும்கூட, இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மட்டும்தான் பா.ஜ.கவின் வகுப்புவாதத்தைத் தீண்டாத தனித் தீவாக உள்ளது. இந்த தேர்தலில் பலவீனமான அண்ணா தி.மு.க தலைவர்களை வைத்துக் கொண்டு, பின்வாசல் வழியாக வருவதற்கு பா.ஜ.க முயற்சிக்கிறது. அதை முறியடிக்கும் ஆற்றல் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு உள்ளது. எனவே, இடங்கள் குறைவு, நிறைவு என்பதல்ல. அனைத்து இடங்களிலும் இந்த அணி வெற்றி பெறும்."
`தி.மு.கவை குறை சொல்லிப் பயனில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லவா?' என்கிறாரே ப.சிதம்பரம்?
``தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள நிலையில் நமது தவறுகளை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி காலத்துக்குப் பின்பு காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை ஒன்றுபோல் நினைத்து வளர்த்தெடுப்பதற்கு பொறுப்பில் இருந்தவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிதான் என்ன? அதை ஆன்ம பரிசோதனை செய்யக் கூடிய நேரம் இது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் எவ்வளவு அதிகமாக வெற்றி பெற முடியுமோ அதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வேகம் காட்ட வேண்டும்."

பட மூலாதாரம், TNCC
பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டதாக சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் வெடித்ததே?
``பணம் கொடுத்தார்கள் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவில் நானும் ஜோதிமணியும் விஷ்ணு பிரசாத்தும் உறுப்பினர்களாக இருக்கிறோம். இவர்கள்தான் பட்டியலை தயார் செய்ய வேண்டும். இதன் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர், 2 செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்று இருக்கிறது. இந்தக் குழு வேட்பாளர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதும். இதன்பிறகு வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு பட்டியலை சரிபார்க்கும். இதன்பிறகு திக்விஜய் சிங் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு உள்ளது. இவர்களைப் பார்த்து வேட்பாளரின் தகுதிகளை விளக்கிக் கூறலாம். இதன்பிறகு சோனியா காந்தியின் தலைமையில் மத்திய தேர்தல் குழு உள்ளது. இதில் வேண்டியவர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கலாம். ஆனால், பணம் வாங்கிக் கொண்டு சீட் வாங்கியதாகக் கூறுவதை என்னால் ஏற்க முடியாது."
உங்களுடைய ட்விட்டர் பதிவில், `தினகரன் அணி 5 சதவிகித வாக்குகளைப் பெற்றால் திமுக 180 இடங்களில் இருந்து 200 இடங்கள் வெற்றி பெறும். 7 சதவிகிதத்துக்கும் மேல் தினகரன் அணி வாக்குகளைப் பெற்றால் 100 இடங்களுக்கு மேல் பா.ஜ.க-அ.தி.மு.க அணி டெபாசிட் இழக்கும்' என்கிறீர்கள். எந்த அடிப்படையில் இப்படியொரு கணக்கு என விவரிக்க முடியுமா?
``கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க 19 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் சீமானும் கமலும் பெறக் கூடிய வாக்குகள் என்பது பல கட்சிகளில் இருந்து வரலாம். கட்சி சார்பில்லாதவர்களிடம் இருந்தும் வரலாம். ஆனால், அ.தி.மு.கவின் வலுவான வாக்குகளை தினகரன் பெறுவார். அவர் அ.தி.மு.கவுக்கு வெளியில் உள்ள வாக்குகளைப் பெறுவார் என நான் நினைக்கவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, தென்மாவட்டங்களில் அ.தி.மு.க செல்வாக்காக இருக்கும் பல இடங்களில் உள்ள நிர்வாகிகள், ஒட்டுமொத்தமாக தினகரனிடம் போய்ச் சேர்ந்திருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.
இதற்கிடையில், தினகரன் மிக சாதுர்யமாக தே.மு.தி.கவையும் இஸ்லாமிய கட்சிகளையும் கூட்டணிக்குள் சேர்த்திருக்கிறார். இந்த அணி சில இடங்களில் இஸ்லாமிய வாக்குகளையும் பிரிக்கிறது. இந்த வாக்குகள் என்பது அ.தி.மு.கவுக்கு வாக்களிக்கக் கூடிய மக்களுடையதுதான். அவர்கள் எல்லோரும் தினகரனுக்கு வாக்களிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டால், 19 சதவிகிதத்தில் இருந்து குறைந்து 14 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க பெறும். அந்த அடிப்படையில் 100 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க அணி டெபாசிட் இழக்கும் என்றேன்."

சிறுபான்மை மக்களின் வாக்குகள் என்பது தி.மு.க அணிக்குச் செல்லும் என்ற பார்வை உள்ளது. இந்த வாக்குகள் தினகரன் அணிக்குத்தான் செல்லும் என்பதை அவ்வளவு அறுதியிட்டுக் கூற முடியுமா?
``சிறுபான்மை மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள், தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு பல வகைகளில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தமிழ்த் தேசியம் பேசுவார்கள். சில இஸ்லாமியர்கள், `பாபர் மசூதி இடிப்பின்போது நரசிம்மராவ் பிரதமராக இருந்தார்' என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டார்கள். இவர்கள், இப்போது தினகரனுக்கு வாக்களிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்."
சேலத்தில் முதல்வர் பேசும்போது, `சிறுபான்மை மக்களுக்கு அரணாக இந்த அரசு இருக்கிறது' என்கிறாரே?
``முதல்வர் நேர்மையற்றவர் என நான் கூற விரும்பவில்லை. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னையிலும் தமிழ்நாட்டிலும் போராட்டம் வெடித்தபோது, `இதனால் எந்த பாதிப்புகளும் இல்லை. இவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறார்கள்' எனக் கூறி வழக்கு போட்ட முதல்வர், இப்போது, `மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்' எனக் கூறுவது எந்த வகையில் சரியானது? அவரால் இயலாமல் போகலாம். ஆனால், குறைந்தபட்ச உண்மைகூட இல்லாதவராக இருக்கிறார்."
`தமிழகமெங்கும் அ.தி.மு.க-பா.ஜ.க வெறுப்பு அலையின் வெப்பத்தை அவர்களது வேட்பாளர்கள் உணர்கின்றனர். போகிறபோக்கை பார்த்தால் டி.டி.வி.தினகரன் கூட்டணி 2 ஆம் இடத்தைப் பெறலாம்' என்கிறீர்கள். தினகரன் மீது தனிப்பட்ட முறையில் எதாவது பாசம் இருக்கிறதா?
``அப்படியில்லை. தேர்தலை அவர் கையாளும் சூழலைப் பார்த்து பிரமிக்கிறேன். எந்த சூழலிலும் தனது நிதானத்தைக் கைவிடாமலும் உடைந்திருக்கின்ற கப்பல் என்ற பதற்றமில்லாமலும் இருப்பதைப் பார்க்கிறேன். இந்தத் தேர்தலில், `அவர் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார்' என அவரும் நினைக்கவில்லை. நானும் நினைக்கவில்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, `அ.தி.மு.கவை ஏற்று நடத்த வேண்டும்' என அவர் நினைப்பதாகவே பார்க்கிறேன். அதற்கான காய்களை அவர் திட்டம் போட்டு நகர்த்துவதாக உணர்கிறேன். அந்த வகையில்தான் இந்தக் கணக்குகளைச் சொல்கிறேன்."
அப்படியானால், மக்கள் நீதி மய்யம் எந்த இடத்தைப் பிடிக்கும்?
``மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி அடித்தளமே வலுவற்று இருப்பதாக உணர்கிறேன். அந்தக் கூட்டணியில் சரத்குமார் வாங்கிக் கொண்டு சென்ற இடங்களில்கூட அவரால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. சரத் குமாருக்கும் ராதிகாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. இந்த அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. இந்தத் தேர்தலில் ஒப்பீட்டளவில் தினகரனின் அணி வலுவுள்ளதாக இருப்பதாக பார்க்கிறேன். அந்தக் கட்சியின் வியூகம், வாய்ப்புகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது தினகரனுக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்."
இதனைக் கேட்பதற்கு காரணம், அண்மையில் நீங்கள் அளித்த ஒரு பேட்டியில், `கமலின் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். அவர் மதசார்பற்ற திமுக அணிக்குள் வர வேண்டும்' என்றீர்கள். உங்கள் குரலை கமல் ஏற்கவில்லையே?
``அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு ஆசையுள்ளது. ஆனால் அவருடைய வயது அதற்கு எதிராக இருக்கிறது. இதுவே ஒரு 15 வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தி.மு.க கூட்டணிக்குள் சில இடங்களைப் பெற்று அவர் சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்க வேண்டும். அதன்பிறகு இந்தக் கட்சியை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வந்திருக்கும். அந்த எதார்த்தத்துக்கு சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவே பார்க்கிறேன். அவரது அரசியல் நேர்மையை நான் சந்தேகப்படவில்லை. ஆனால் வீணாகப் போய்விட்டாரே என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது."

பட மூலாதாரம், Edappadi Palaniswami
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விலையில்லா வாஷிங்மெஷின் என்றெல்லாம் அதிமுக வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
``வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்றால், ஏற்கெனவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகைகளைக் கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளீர்களே. இது எப்படி சாத்தியம். வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் எப்படி வேலையை கொடுக்க முடியும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் முதலிடத்தில் இருந்த மாநிலம் இப்போது 14, 15வது இடத்துக்குப் போய்விட்டது. மாநிலத்தின் கடன் தொகையே 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. 10 வருடமாக ஆட்சியில் இருந்தபோது செய்யாதவர்கள், இனிமேலும் செய்வார்களா என்ன?"
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆட்டோ வாங்குவதற்கு மானியம் என திமுகவும்தானே வாக்குறுதிகளை வாரியிறைத்துள்ளது. இவை மட்டும் சாத்தியமா?
``தி.மு.க பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லை. அவர்கள் தங்களின் திட்டங்களை முன்வைத்துள்ளார்கள். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு எப்படி செயல்படுத்துவார்கள் எனப் பார்க்க வேண்டும். டெண்டர் திட்டங்களை முறைப்படுத்தினாலே லட்சம் கோடியை மிச்சப்படுத்த முடியும். அ.தி.மு.க அரசு டெண்டர் விதிமுறைகளை வளைத்துவிட்டது. இதற்கு எதிராக தி.மு.க தலைவர் முயற்சிகளை முன்னெடுப்பார் என நம்புகிறேன்."
அ.தி.மு.க ஆட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பே இல்லை என்பன போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறதே?
``எதிர்ப்பே இல்லையா அல்லது எதிர்ப்பதற்கு சக்தியில்லாமல் இருக்கிறார்களா? காய்கறி வியாபாரிகள் எல்லாம் பெட்ரோலுக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டு பெருமூச்சுவிட்டபடியே செல்கிறார்கள். அந்தக் கோபத்தையெல்லாம் தேர்தல் வாக்குப் பெட்டியில் மக்கள் காட்டுவார்கள்."
தமிழகத்தில் பா.ஜ.க வளர்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
``அ.தி.மு.க அணியில் 20 சீட்டுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜ.கவின் அடையாள முகங்களாக இருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லையே. கடந்த 20 நாள்களாக அவர்களைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருக்கிறதே. பா.ஜ.கவோடு கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க தலைமை நெருக்கடியில் உள்ளது. இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?"
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயா? வேட்பு மனு தாக்கலில் குளறுபடி
- ''பெண்கள் பிரதிநிதித்துவத்தை மதிக்கின்றனவா அரசியல் கட்சிகள்?'' - நிலவரம் என்ன?
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












