தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயா? வேட்பு மனு தாக்கலில் குழப்பம் நடந்தது எப்படி?

பட மூலாதாரம், NAAMTAMILAR.ORG
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில், சீமான் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில், ` தனக்கு அசையும் சொத்தாக 31,06,500 ரூபாய் உள்ளதாகவும் அசையா சொத்து எதுவும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருடைய மனைவிக்கு அசையும் சொத்தாக 63,25,031 ரூபாயும் அசையா சொத்தாக 25,30,000 ரூபாயும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ` சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாயா?' எனக் கேள்வியெழுப்பி, சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை பதிவிட்டனர். இதனைக் கவனித்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.
இந்நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது தட்டச்சு பிழையால் ஆண்டு வருமான கணக்கு தவறாக இடம்பெற்று விட்டதால் அதனைத் திருத்தி மீண்டும் ஒரு வேட்பு மனுவை சீமான் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
`உண்மையில் சீமானின் ஆண்டு வருமானம் 2,60,000 ரூபாய். இதற்காக அவர் கட்டிய வருமான வரியே ஆயிரம் ரூபாய்' எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
`திருவொற்றியூர் தொகுதியில் சீமான் மீண்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்வாரா?' என நாம் தமிழர் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோகுலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
``நாங்கள் மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. கூடுதலாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளோம். ஒரு வேட்புமனுவுக்கு மூன்று உறுதிமொழிப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம். அதேநேரம், ஒருவரே கூடுதலாக பணம் கட்டி இன்னொரு மனுவையும் தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கும் 3 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யலாம். ஆண்டு வருமானத்தைக் குறிப்பிடும்போது வருமான வரி கட்டிய தொகையை தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டார்கள்" என்கிறார்.

பட மூலாதாரம், NAAMTAMILAR
`மனுவை தாக்கல் செய்யும்போது பிழைகளை கவனித்திருக்கலாமே?' என்றோம். ``இன்று உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளோம். இதன்பிறகு இது குறித்துப் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார் கோகுல்.
`பிரமாண பத்திரத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதனை சரிசெய்வதற்கு தேர்தல் ஆணைய விதிகளில் இடமுள்ளதா?' என தமிழக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கருணாகரனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
``வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு, அதனை பரிசீலனை செய்வதற்குள் தட்டச்சில் பிழை ஏற்பட்டு விட்டதாகக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுக்கலாம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தேர்தல் நடத்தும் அலுவலரின் கடமை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர் தனது மனுவில் குறிப்பிட்ட விவரங்களில் பிழைகள் இருந்தால் அதனை சரி செய்து திருத்தித் தருமாறு தேர்தல் அலுவலர் கேட்கலாம். பொதுவாக, ஒரு வேட்பாளர் 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாலும் கூட, அதே தொகுதியில் புதிதாக வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். அப்போது புதிய பிரமாண பத்திரத்தை இணைத்துக் கொடுக்கலாம். இதன் மூலம் பிழைகளுடன் கூடிய முதல் மனு தள்ளுபடி ஆகிவிடும். அவரது இரண்டாவது மனு ஏற்கப்பட்டு விடும். இதில் எந்தவித சிக்கல்களும் இல்லை" என்கிறார்.
`புதிய பிரமாண பத்திரத்தை சீமான் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், இதையே காரணம் காட்டி தேர்தல் அலுவலர் அவரது மனுவை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியிருக்கும். இதன் காரணமாக அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போயிருக்கும்' என அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













