தமிழகத்தின் கடந்த 20 ஆண்டுகள் கடன் எவ்வளவு? அடுத்த வருடம் ரூ.5.70 லட்சம் கோடி ஆகுமா?

- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
சமீபத்தில் தமிழக அரசின் 2021 - 22 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது, தமிழகத்தின் கடன் அளவு 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
உண்மை நிலவரம் என்ன?
ஆனால், தமிழகத்தின் கடன் அளவு மார்ச் 2021 நிலவரப்படி 4,85,502.54 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருப்பதாக, தமிழகத்தின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அடுத்த மார்ச் 2022-ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் 5,70,189.29 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் அவ்வுரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே தற்போது தமிழகத்தின் கடன் அளவு 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது என பரவும் செய்தி தவறானது.
20 ஆண்டுகளில் யார் ஆட்சியில் அதிக கடன்?

பட மூலாதாரம், O PANEERSELVAM TWITTER
2001ஆம் ஆண்டு மார்ச் மாத காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கடன் தொகை அளவு 34,540 கோடி ரூபாயாக இருந்தது என ஆர்பிஐ அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது 2021ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி அது 4,85,502.54 கோடியாக இருக்கலாம் என நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் கூறபட்டுள்ளது. எனவே கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு சுமார் 1,305 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது சுமார் 13 மடங்கு கடன் அதிகரித்திருக்கிறது.
மற்ற மாநிலங்களின் நிலை என்ன?
தமிழகத்தின் கடன் மட்டும் தான் இப்படி 13 மடங்கு அதிகரித்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை. ஹரியாணா மாநிலத்தின் கடன் 2001-ம் ஆண்டில் 14,649 கோடியாக இருந்தது, 2020-ம் ஆண்டில் அது 2.06 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது சுமார் 14 மடங்கு உயர்வு.
இதே போல கர்நாடகா மாநிலத்தின் கடன் கடந்த 2001-ம் ஆண்டில் 25,301 கோடி ரூபாயாக இருந்தது 2020ஆம் ஆண்டில் அது 3.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இப்படி பல மாநிலங்களின் கடன் அளவு, கடந்த இரு தசாப்தங்களில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தின் கடன் யார் ஆட்சியில் எவ்வளவு அதிகரித்தது?
2001ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து வெளியேறும் போது 34,540 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் அளவு, 2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலம் நிறைவடையும் போது 63,848 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. ஐந்தாண்டு காலத்துக்குள் கடனளவு சுமார் 84 சதவீதம் அதிகரித்தது.
2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியை பறிகொடுத்த பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அதன் ஐந்தாண்டு நிறைவில், அதாவது 2011ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கும் போது 1.14 லட்சம் கோடி ரூபாய் (சுமார் 79%) ஆக அதிகரித்து இருந்தது தமிழகத்தின் கடன்.
தமிழக அரசின் கடன், 2011 - 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் 2.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, 2016 - 2021 அதிமுகவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 4.85 லட்சம் கோடி ரூபாயாக தமிழகத்தின் கடன் அளவு அதிகரிக்கலாம் என தமிழக அரசே கணித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் கடனளவு 1.14 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.85 லட்சம் கோடி ரூபாய் என, 4 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








