நரேந்திர மோதி ஜி20 மாநாட்டில் உரை: கொரோனா வைரஸ், தொழில்நுட்பம், மனித குல வரலாறு, இரண்டாம் உலகப் போர் குறித்து பேச்சு

பட மூலாதாரம், Pti
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நேற்று (21 நவம்பர் 2020, சனிக்கிழமை) 15ஆவது ஜி20 மாநாட்டில், காணொளிக் காட்சி மூலம் கலந்து கொண்டார்.
'க்ரூப் ஆஃப் 20' எனப்படும் ஜி20 அமைப்பு, உலகின் 20 மிகப்பெரிய பொருளாதாரங்களை உள்ளடக்கியது.
ஜி20 குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 19 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒரே உறுப்பினராக கருதப்படுகின்றன.
இந்த ஜி20 நாடுகள் குழு, உலக பொருளாதாரத்தில் 85 சதவீதத்தையும், முதலீட்டில் 80 சதவீதத்தையும் , மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையையும் கொண்டுள்ளன.
ஜி20 மாநாடு 2020 - சௌதி அரேபியா தலைமை
இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை, செளதி அரேபியா தலைமை ஏற்று நடத்தியது. சீனாவின் ஷி ஜின்பிங், அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொரோனா காலத்துக்கு பிந்தைய உலகில் திறனுடையோர் தரவுத்தளம், சமூகத்தில் தொழில்நுட்பத்தின் ஊடுருவல், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பூமியைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுதல் ஆகிய நான்கு கூறுகளை உள்ளடக்கிய பன்னாட்டு குறியீடு ஒன்றை உருவாக்க இந்த மாநாட்டில் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மனித வறுமை குறியீடு (Human Poverty Index), மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index), இதழியல் சுதந்திர குறியீடு (Press Freedom Index) என ஏற்கனவே பல பன்னாட்டுக் குறியீடுகள் உலக நாடுகள் வெவ்வேறு துறைகளில் அடைந்துள்ள வளர்ச்சியைச் சுட்டக் கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், உலகின் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விவாதித்தார்கள். பிரதமர் மோதி பேசிய பிற முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம்.
- மனித குல வரலாற்றில் கொரோனா தொற்று பரவல் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.
- உலகின் பெரிய பொருளாதாரங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், உலகம், கொரோனா பிரச்சனையில் இருந்து வேகமாக மீண்டு வரும்.
- ஜி20 மாநாட்டில், திறமை, வெளிப்படைத் தன்மை, தொழில்நுட்பம் மற்றும் இந்த உலகத்தை பாதுகாக்கும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் உலகக் குறியீடு தொடங்கப்பட வேண்டும்.
- பல்திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் மேம்பாடு போன்றவைகள் வழியாக திறன் தரவுத்தளம் (Talent Pool) ஒன்றைத் தொடங்கலாம். இந்தத் திட்டம், நம் தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும்.
- மனித குலத்துக்கு ஏற்படும் நன்மையின் அடிப்படையில்தான், புதிய தொழில்நுட்பங்களின் மதிப்பை அளவிட வேண்டும்.
- நம் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான், அது நம் சமூகங்கள் ஒன்று சேர்ந்து, நம்பிக்கையோடு நெருக்கடிகளை எதிர்கொள்ள உத்வேகமாக இருக்கும்.
- உலகை பாதுகாக்கும் எண்ணம்தான், ஓர் ஆரோக்கியமான மற்றும் புனிதமான வாழ்கை முறையை கடைபிடிக்க ஊக்குவிக்கும்.
- ஜி20 மாநாடு சிறப்பாக செயல்படவும், டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்தவும், இந்தியா தன் தகவல் தொழில்நுட்பத் திறனை வழங்கி இருக்கிறது எனப் பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












