வீட்டுப்பாடம் செய்யாததால் குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட சிறுவன்

Education

பட மூலாதாரம், Education Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பிரான்சின் மல்ஹவுஸ் நகரில் வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஒன்பது வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டுப்பாடம் செய்ய மறுத்த சிறுவன் துடைப்பத்தின் கைப்பிடியால் அடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட சிறுவனின் அண்ணன், சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார்கள்.

சிறுவனின் தாயார் அங்கு இல்லை என்றாலும், அங்கு என்ன நடந்தது என்று அறிந்திருந்தார் என்பதால் அவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறுவனின் மரணம் மல்ஹவுஸ் நகரில் வசித்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, சிறுவனின் பெற்றோருக்கு எதிராக ஊர்வலம் ஒன்றை நடத்தத் தூண்டியது.

ஆனால் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் தொடக்கத்தில் வேறு தகவல்களை கொடுத்தாலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் விசாரணை செய்யத் தொடர்ந்தனர். சிறுவனின் உடலில் காயங்கள் காணப்பட்டன. குறிப்பாக சிறுவனின் சடலத்தின் கால்களின் அடிப்பாகத்தில் கன்றிப்போயிருந்ததாக அல்ஸாசின் வலைதளம் கூறுகிறது.

சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலும், மரணத்திற்கான காரணம் அவர் அடிக்கப்பட்டதுதான் என்று DNA சோதனை கூறுகிறது.

சிறுவன் மழுங்கலான பொருட்களால் தாக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

மாணவன்

பட மூலாதாரம், Getty Images

நீதித்துறை விசாரணைக்காக உள்ளூர் அரசு வழக்கறிஞரின் முன் ஆஜராவதற்காக வியாழனன்று போலீஸ் அவர்களை மல்ஹவுஸில் தடுத்து வைத்துள்ளது.

இறந்துபோன சிறுவனின் 19 வயது அண்ணன் சிறுவனைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நீதிபதி இந்த சோகமான சம்பவத்தின் காரணத்தை வெளிக்கொணர்வார் என்று நம்பப்படுகிறது.

அடிப்பதை தடைசெய்வது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றம் பரிசீலித்து வந்த நிலையில், சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது.

வன்முறை இல்லாத கல்விக்கு குழந்தைகளுக்கு உரிமை உண்டு; பெற்றோர் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் உடல் அல்லது வாய்மொழியால் வன்முறையை பிரயோகிப்பது, உடல் ரீதியான தண்டனை மற்றும் தார்மீக துஷ்பிரயோகம், ஆகியவற்றின் மூலம் குழந்தைகளை தண்டிப்பதற்கு தடை செய்வது என இரண்டு பரிந்துரைகள் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :