#SmashBrahmanicalPatriarchy - பிராமணர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும், சூழ்ச்சியும் வெளிப்படுகிறதா?

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், @annavetticad

    • எழுதியவர், சிந்துவாசினி
    • பதவி, பிபிசி இந்தி

#SmashBrahmanicalPatriarchy அதாவது ''பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்'' என்ற சொல்லாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

பிராமண ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கம் இந்த சொற்களை பயன்படுத்தும்போது சர்ச்சைகள் எழுவதற்கும் பஞ்சமேயிருப்பதில்லை.

இந்த முறை ட்விட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்ஸி #SmashBrahmanicalPatriarchy என எழுதப்பட்ட பதாகையை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது வெளிப்பட்டதால் பிரச்சனை பூதாகரமாகிவிட்டது.

அண்மையில் இந்தியாவுக்கு அவர் வந்திருந்தபோது சில இந்திய பெண்களை சந்தித்தபோது, அதில் ஒரு பெண் ஜாக்குக்கு பதாகை ஒன்றை பரிசளித்தார். அதை கையில் வைத்துக் கொண்டு அந்த பெண்களுடன் ஜாக் டோர்ஸே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த பதாகையில் பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம் (Brahminical Patriarchy) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை அடுத்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் வலுத்துள்ளன.

"பிராமணர்களுக்கு எதிராகவும், பிராமணர்கள் மீதான வெறுப்பு மற்றும் பாரபட்சமான நடத்தை" என சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் விமர்சிக்கின்றனர்.

#Brahmins மற்றும் #BrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேகுகளில் ட்விட்டரில் பதிவுகளும், விவாதங்களும் சூடாகின. இதையடுத்து ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், @dalitdiva

ட்விட்டர் இந்தியாவில் அளிக்கப்பட்ட விளக்கம் இது -"நாங்கள் அண்மையில் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தோம். அவர்களின் ட்விட்டர் அனுபவங்கள் பற்றி புரிந்து கொள்வதற்காக அவர்களுடன் பேசினோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலித் செயற்பாட்டாளர் ஒருவர் இந்த பதாகையை ஜாக்குக்கு பரிசாக கொடுத்தார்.''

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ட்விட்டர் இந்தியாவின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட இரண்டாவது பதிவில், ''இது ட்விட்டருடைய பதிவோ அல்லது எங்கள் சி.இ.ஓவுடையோ கருத்தோ அல்ல. உலகம் முழுவதும் ட்விட்டர் போன்ற பொதுத்தளங்களில் நடைபெறும் கருத்து பரிமாற்றங்களின் அனைத்து கோணங்களையும் பார்க்கவும், கேட்கவும், புரிந்து கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டம் அது.''

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், @vijaya

இந்த விளக்கங்கள் அனைத்திற்கு பிறகும் விவாதங்கள் அடங்கவில்லை. விவாதங்களும் சர்ச்சைகளும் சூடு தணியாமல் தொடர்கின்றன.

இந்த நிலையில் "பிராமண ஆதிக்கம்' என்றால் என்ன? உண்மையில் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும், சூழ்ச்சியும் வெளிப்படுகிறதா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன.

சமுதாயத்தில் பெண்களின் நிலைமை மற்றும் சாதி அமைப்புகளின் நிலைமை பற்றி பேசுவதற்காக பெண்ணிய இலக்கியம் மற்றும் கட்டுரைகளில் 'பிராமண ஆதிக்கம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

தலித்துகள் மற்றும் பெண்ணியவாதிகள் இதற்கான பல உதாரணங்களை கொடுக்கின்றனர். மதம் மற்றும் அது குறித்த கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் தீவிரமாக கடைபிடிக்கும் பிராமணர்கள், ஒரு பெண் சுதந்திரமாக வாழ்வதையும், சிந்திப்பதையும் ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணாக பிறந்துவிட்டால் முதலில் தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், பின்னர் கணவன், அதன்பின் மகன்களின் பாதுகாப்பிலேயே வாழவேண்டும் என்பதையே தீவிரமாக வலியுறுத்துகிறார்கள்.

பொதுவாக 'பிராமண ஆதிக்கம்' என்ற வார்த்தை அடக்குமுறையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. பிரபல பெண்ணிய எழுத்தாளர் உமா சக்ரவர்த்தி எழுதியுள்ள 'Conceptualizing Brahmanical Patriarchy in India' என்ற கட்டுரையில், "உயர் சாதிகளில் நிலவும் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்படி, பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை கட்டுப்படுத்தும் பாரம்பரியம் 'பிராமண ஆதிக்கம்' என்று குறிப்பிடுகிறார்.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், AFP/Getty

தலித் சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் கஞ்சே அய்லய்யாவின் பார்வை

'பிராமண ஆதிக்கம்' என்பதை புரிந்து கொள்ள முதலில் தந்தை வழிச் சமூகம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தந்தை வழி சமூகம் என்பது ஆண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வது. அவரது பெயரை தங்கள் பெயரில் இணைத்துக் கொள்வது (குடும்பப் பெயர் உட்பட) என்பதை குறிப்பாக சொல்லலாம்.

பார்க்கப் போனால், உலகம் முழுவதுமே தந்தை வழி சமூகமும், ஆணாதிக்கமும் அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், பிராமண ஆதிக்கம் என்பது இந்திய சமுதாயம் உலகிற்கு கொடுத்த ஒரு நடைமுறை.

பிராமண ஆதிக்கம் அல்லது பிராமண அடக்குமுறை என்பதை புரிந்து கொள்வதற்காக, இந்திய வரலாற்றை நாம் சற்று பார்க்க வேண்டியிருக்கிறது. வேத காலத்திற்கு பிறகு இந்து மதத்தில் கடும்போக்கு தொடங்கியது. அதன்பிறகு பெண்கள் மற்றும் சூத்திரர்கள் எனப்படும் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாகியது.

பெண்களும், தாழ்ந்த சாதியினரும் ஒன்றுபோலவே நடத்தப்பட்டார்கள் என்றே சொல்லலாம். இரு சாரருமே 'தீண்டத்தகாதவர்கள்' மற்றும் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டனர் என்பது 'மனு சாஸ்திரம்' போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், TWITTER

சக்திவாய்ந்த பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள்தான் இந்த கருத்துக்களை உருவாக்கி நிறுவினார்கள். இங்கிருந்துதான் பிராமண ஆதிக்கம் என்பது தொடங்குகிறது.

பிராமண குடும்பங்களை சேர்ந்த பெண்களின் நிலை, ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் நிலையை விட மேம்பட்டது என்று கூறிவிடமுடியாது.

இன்றும்கூட கிராமங்களில் பிராமணர் மற்றும் உயர் சாதியை சேர்ந்த பெண்களுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவோ, கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவோ அல்லது வெளியில் சென்று வேலை செய்வதற்கோ அனுமதி இல்லை. பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் குடும்பத்தின் மரியாதை என்று பிராமண மற்றும் உயர் சாதி என்று தங்களை கருதுபவர்கள் நம்புகின்றனர்.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், Getty Images

அதே நேரத்தில் தலித்துகளிடம் ஆதிக்க குணம் இல்லை என்று சொல்லிவிட முடியாது என்ற போதிலும், 'தலித் ஆதிக்கம்' மற்றும் 'பிராமண ஆதிக்கம்' என்பதில் ஒரு வேறுபாடு உள்ளது.

தலித் ஆதிக்கம் என்பதில், பெண்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும், இரண்டாம் நிலையில் உள்ள மனிதராக கருத்தப்படுகிறார்கள். ஆனால், இது பிராமண ஆதிக்கத்தில் இருந்து சற்றே அதிகமான ஜனநாயகம் கொண்டது என்று சொல்லலாம்.

பெண்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறது பிராமண ஆதிக்கம். அந்த கட்டுப்பாடு அவர்களின் உடலை மட்டும் அல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்த விரும்புகிறது.

ஒரு தலித் பெண்ணை, அவரது கணவர் அடித்தால், அந்தப் பெண் குறைந்தபட்சம் வாய்விட்டு அழுவார், கூச்சலிடுவார், கூக்குரலிட்டு அருகில் உள்ளவர்களுக்கு தெரிவிப்பார். ஆனால் பிராமண அல்லது உயர்சாதி பெண்ணாக இருந்தால், அடிவாங்கிய பிறகும் அதை வெளிப்படுத்தாமல், ஒரு அறைக்குள் அமர்ந்து அழுவார். ஏன் தெரியுமா? உரக்க அழுதாலோ, கூச்சலிட்டாலோ, குடும்பத்தின் மானம் மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம்!!

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், BISWARANJAN MISHRA

இது பிராமணம் என்பதற்கான எதிர்ப்பல்ல, கருத்தாக்கங்களுக்கு எதிரானது

பிராமண ஆதிக்கத்திற்கான எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தத்திற்கு எதிரான எதிர்ப்பு; பிராமண சமூகத்திற்கு எதிரானது அல்ல என்று கூறுகிறார் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்.எல்) உறுப்பினரான கவிதா கிருஷ்ணன்.

நான் ஒரு பிராமணன் என்று பெருமையுடன் ஒருவர் சொல்லிக் கொள்வதன் அர்த்தம் என்ன என்பதுதான், நாம் முதலில் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்று சொல்கிறார் கவிதா.

"பிராமணம் என்பது மிகவும் அடர்த்தியான சொல். இது வரலாற்றுச் சுமை கொண்ட ஒரு பாரிய வார்த்தை. கடந்த பல காலமாக பிரமாண சாதி நமது சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த ஆதிக்கத்தில் பெண்கள் கட்டுண்டு கிடந்தனர்'' என்கிறார் கவிதா.

''ஒருவர் தன்னை தலித் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபட்டால், பிராமணர் என்று சொல்லிக் கொள்வதில் ஏன் பெருமிதப்படக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். இவை இரண்டும் ஏன் வேறுபடுகிறது என்றால், தலித் என்பது ஏற்கனவே அடக்கி வைக்கபப்ட்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால் பிராமணம் என்பது அப்படி அல்ல'' என்கிறார் கவிதா கிருஷ்ணன்.

பிராமண ஆதிக்க சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும், அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார் கவிதா.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், Getty Images

"ஆதிக்கம் என்பது ஏறக்குறைய உலகின் எல்லா இடங்களிலும் இருக்கிறது, ஆனால் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் அது தொடர்கிறது. இந்தியாவில் அது தொடர்வதற்கான காரணம் பிரமாணம் என்பதன் அடிப்படையில்தான்" என்கிறார் கவிதா கிருஷ்ணன்.

ஆனால் அனைவரும் பிராமண ஆதிக்கம் என்ற கருத்தையும், அது இன்னும் இருப்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

'ஒரு சிலரின் சதித்திட்டம்'

பிராமண ஆதிக்கம் என்று சொல்லப்படுவது "ஐரோப்பிய கலாசாரத்தின் சதி" என்று சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பின்பற்றுபவரும், பா.ஜ.க எம்.பியுமான பேராசிரியர் ராகேஷ் சின்ஹா.

"இந்திய சமுதாயம் எப்போதுமே முற்போக்கானதாகவே இருந்து வந்துள்ளது. அது எப்போதுமே அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு, அனைவருக்கும் மதிப்பும் மரியாதையையும் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டது. ஒரு புறத்தில் சாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறோம், மறுபுறம் ஒரு சாதியின் சிறப்பை சிலர் தவறாக முன் வைத்து, சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ட்விட்டர் சி.இ.ஓ பதாகையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பது, இந்தியாவை குறித்த அவரது நிறுவனத்தின் எதிர்மறையான அணுகுமுறையை காட்டுவதாக ராகேஷ் சின்ஹா கருதுகிறார்.

"ஒவ்வொரு சமுதாயத்திலும் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். இந்திய சமுதாயமானது, தனது குறைகளை தானே சரி செய்ய முயல்கிறது, ஆனால் ஒருசிலர் சாதியின் சிறப்பம்சங்களை, எதிர்மறையானதாக சித்தரித்து நமது சமுதாயத்தின் தரத்தை குறைத்துக் காட்ட முயற்சிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

இந்த பதாகையை வடிவமைத்த பெண் என்ன சொல்கிறார்?

இந்தப் பதாகையை வடிவமைத்த கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான தேன்மொழி சௌந்தரராஜனிடம் பிபிசி பேசியது.

#SmashBrahmanicalPatriarchy

பட மூலாதாரம், iStock

"இந்த பதாகை இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் இருக்கிறது. ஆனால் இதுவரை இந்த அளவு சர்ச்சைகளோ விவாதங்களோ எழுந்ததில்லை. ட்விட்டரின் சி.இ.ஓ இந்த பதாகையை கையில் ஏந்தி நின்றதுதான் இந்த பதாகையை பேசுபொருளாக்கிவிட்டது. இந்த விஷயம் இப்போது சர்வதேச அளவில் பேசப்படும் என்பதால் இந்த பாதகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அச்சப்படுகிறார்கள்" என்று விளக்கமாக கூறுகிறார் தேன்மொழி சௌந்தரராஜன்.

ஜாக் டோர்ஸிக்கு இந்த பதாகையை வழங்கிய சங்பாலி அருணா என்ன சொல்கிறார்? "நான் ஒரு தலித், தலித்துகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதை உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்கிறார் சங்பாலி அருணா.

"இந்தியாவில் ஆதிக்கத்தின் ஆணிவேர் பிராமணியம்தான். எனவே ஆதிக்கத்தை அகற்ற வேண்டுமானால் பிராமணியத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்கிறார் சங்பாலி.

பிராமணிய ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்பை பிராமண சமூகத்திற்கு எதிரானதாக பார்க்கக்கூடாது, அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தை அரசியலாக்கக்கூடாது என்றும் சங்பாலி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :