அம்பேத்கர் ரிங்டோன், உயர் சாதி பெண்ணுடன் நட்பு: கொல்லப்பட்ட தலித் மக்களின் கதை
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்தியாவில் நடக்கும் சாதிய வன்கொடுமைகள் குறித்து தான் எடுத்த புகைப்படங்களை புகைப்பட செய்தியாளரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்வாவ் ஓல்வே, மும்பையில் கண்காட்சி வைத்திருந்தார்.
இச்சட்டம் குறித்து வைக்கப்படும் ஆதாரமற்ற கூற்றுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதுடன், "கடினமான உண்மைகள்" மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுதர்வாவ் ஓல்வே கருதுகிறார்.
ஓல்வேவின் சில புகைப்பட கதைகள் இங்கே:
மணிக் உடகே: அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக கல்லால் அடித்து கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், SUDHARAK OLWE
ஏப்ரல் 14, 2014-ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக பூனேவை சேர்ந்த 25 வயதான மணிக் கொல்லப்பட்டார். இவரது குடும்பமே இவரது சம்பளத்தை நம்பிதான் இருந்தது. அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுவதற்காக ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்ய இவர் முடிவு செய்ததற்காக, நான்கு உயர்சாதி நபர்களால் இரும்பு கம்பியாலும், கல்லாலும் அடித்து கொல்லப்பட்டார்.
மதகுர் கெஜ்ஜி: கிணறு வெட்டியதற்காகக் கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், SUDHARAK OLWE
மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தை சேர்ந்த நன்கு படித்த தலித்-பௌத்த குடும்பத்தைச் சேர்ந்த 48 வயதான மதகுர் கெஜ்ஜி, தனது நிலத்தில் கிணறு வெட்டியதற்காக 12 உயர்சாதி நபர்களால் கொல்லப்பட்டார். அருகில் மருத்துவமனை இல்லாததால், மதகுரின் குடும்பத்தினர் அவருக்கு சிசிச்சை அளிக்க பல கிலோ மீட்டர் தூரம் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நன்கு படித்ததாலும், பொருளாதார ரீதியாக வலுவாக இருந்ததாலும், கிராமப்புற அரசியலில் தீவிரமாக செயல்பட்டதாலும் அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
சாகர் ஷீவ்வால்: அம்பேத்கர் ரிங்டோனை வைத்திருந்ததால் கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், SUDHARAK OLWE
அம்பேத்கரைப் போற்றும் ரிங்டோனை வைத்திருந்தது, சாகர் ஷீவ்வாலில் உயிரையே எடுத்துவிட்டது. 24 வயதான நர்சிங் மாணவரான சாகர், ஷீரடியில், 2015ஆம் ஆண்டு மே மாதம், உயர்சாதி நபர்களால் கொல்லப்பட்டார். ஒரு நண்பரின் திருமணத்திற்கு சாகர் ஷீரடிக்கு வந்திருந்தார். கொண்டாட்டங்களின் போது, அவரும் அவரது இரண்டு உறவினர்களும் ஒரு உள்ளூர் மதுபான கடைக்கு சென்றிருந்தனர், அங்கு அவருடைய தொலைப்பேசிக்கு சில முறை அழைப்பு வந்தது. சாகர் அம்பேத்கரை போற்றும் பாடலை தனது ரிங்டோனாக வைத்திருந்தார். கடைக்கு வெளியே காத்திருந்த 9 உயர்சாதி நபர்கள், ரிங்டோனை மாற்றுமாறு சாகரிடம் கேட்டனர். ஆனால், சாகர் மறுத்துவிட்டார். அது பெரிய சண்டையாக மாறி, சாகரை அடித்து கொன்றுவிட்டனர்.
பர்தி: புறக்கணிக்கப்பட்ட பழங்குடியினர்

பட மூலாதாரம், SUDHARAK OLWE
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில், 19 பர்தி பழங்குடி மக்களின் வீடுகள், அருகில் வசிக்கும் உயர்சாதி குடும்பத்தினரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனைத்துக் குடும்பத்தினரும் தற்போது திறந்த இடத்தில், ஒரே ஒரு உடைந்த கூடாரத்தின் கீழே வசிக்கின்றனர்.
நிதின் ஆஜே - நட்பிற்காகக் கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், Sudharak Olwe und Helena Schaetzle
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் ஆஜே, உயர் சாதி பெண்ணுடன் பேசியதால் கொல்லப்பட்டு மரத்தில் தூக்கிடப்பட்டார். உயர்சாதி பெண்ணின் மீது நிதினுக்கு காதல் இருப்பதாகச் சந்தேகத்தின் பேரின், அப்பெண்ணின் சகோதரர் உட்பட மூன்று உயர்சாதி நபர்கள் இக்கொலையில் ஈடுபட்டனர். 2014-ம் ஆண்டு நிதின் கொல்லப்பட்டபோது, அவர் 12-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
ரோகன் ககாடே: காதல் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், Sudharak Olwe
மகாராஷ்டிராவின் சட்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகன் ககாடே தனது 19வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, உயர்சாதி பெண் ஒருவருடன் காதலில் இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேயரின் கொல்லப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்டவரில் ஒருவர், அப்பெண்ணின் சகோதரர். இக்கொலையைச் செய்தவர்கள், ரோகனின் தலையை வெட்டிவிட்டு, அவர் உடலை எரித்துவிட்டனர்.
சஞ்சய் டேனேன்: தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வைக் கேட்டதற்காக கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், SUDHARAK OLWE
38 வயதான சஞ்சய் டேனேனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை, அவரது சக ஊழியர் போலியான ஆவணங்கள் மூலம் பறித்துக்கொண்டார். இதற்கு எதிராக போராடி பலகட்ட முயற்சிக்குப் பின்னர் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை பெற்றதால் கொல்லப்பட்டார்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய(2016) தகவல்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாடு முழுவதும், 40,801 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 25.6%(10,426) சம்பவங்களும், பீகாரில் 14%(5,701 ) சம்பவங்களும், ராஜஸ்தானில் 12.6%(5,134 )சம்பவங்களும் 2016-ல் நடந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












