வான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் தென்மேற்குப் பகுதியில், அரசு ஆதரவுப் படைகளால் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல்களில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன.

பட மூலாதாரம், AFP
நள்ளிரவுக்குப் பின் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சைதா நகரில் உள்ள மருத்துவமனை ஸ்தம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்ட விமானங்கள் பின்னர் முசாய்ஃபிரா நகரில் ஒரு மருத்துவமனையில் நடத்திய வான் தாக்குதலால் அந்த மருத்துவமனை மூடப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. பின்னர் ஜிசா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையும் ரஷ்யாவின் வான் தாக்குதலுக்கு உள்ளானது.
ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சிரியாவின் ராணுவம் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுத் தரப்பிடையே நடந்துவரும் சண்டையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 50,000 மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

டேரா மற்றும் குனேத்ரா ஆகிய மாகாணங்களில், அரசுக்கு எதிரான படைகளை ஆதரிக்கும் அமெரிக்கா மற்றும் ஜோர்டான், அரசை ஆதரிக்கும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே உண்டான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தால் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவுகிறது.
எனினும், டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கிழக்கு கோட்டாவில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்துள்ளதால், அந்தப் பிராந்தியங்களை மீண்டும் தனது அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள சிரியா அதிபர் ஷார் அல்-அசாத் விரும்புகிறார்.
முசாய்ஃபிரா நகரில் உள்ள ஒரு குடிமக்கள் பாதுகாப்பு மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பட மூலாதாரம், AFP
முன்னதாக, மருத்துவமனைகளை குறி வைப்பதை சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் ராணுவங்கள் மறுத்திருந்தன.
கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசு ஆதரவு படைகள் குண்டு வீசியதில் குறைந்தது 14 குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜூன் 17 அன்று தாக்குதல் தொடங்கப்பட்டது முதல் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் 39 பேரும், அரசு ஆதரவு படைகளை சேர்ந்த 36 பெரும் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தாக்குதல்களால் தேரா மாகாணத்திலுள்ள 45,000 முதல் 50,000 மக்கள் ஜோர்டான் மற்றும் கோலன் ஹெய்ட்ஸ் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதநேய உதவிகள் தேவை என்றும் ஐ.நா கூறியுள்ளது.
சிரியாவிலிருந்து மேற்கொண்டு அகதிகள் யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜோர்டான் கூறியுள்ளதால், சிரியாவின் தெற்கு எல்லைகள் விரைவில் நெரிசலைச் சந்திக்கும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நாவில் அகதிகளாக பதிவு செய்துகொண்ட 6.66 லட்சம் பேர் உள்பட, 13 லட்சம் பேர், சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011 முதல் தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதால், தங்கள் நிதி ஆதாரங்களும் உள்கட்டமைப்பும் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக ஜோர்டான் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












