ஓசியில் காய்கறி தராததால் பொய் வழக்கு: பிகார் போலீசார் 12 பேர் இடைநீக்கம்

    • எழுதியவர், சித்து திவாரி
    • பதவி, பிபிசிக்காக

பாட்னாவின் அகம்குவா காவல்நிலையத்தில் உள்ள அனைத்துப் போலீசாரும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர். 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காரணம்,காய்கறி விற்கும் 14 வயது சிறுவன்.

பீகார்: லஞ்சமாக காய்கறிக்கு ஆசைப்பட்டு கூண்டோடு காணாமல்போன காவல் நிலையம்

பட மூலாதாரம், BRAJESH

பாட்னாவின் ஒரு கடைவீதியில் தந்தையுடன் சேர்ந்து காய்கறிகள் விற்பனை செய்பவர் சிறுவன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போலீசார் அவனிடம் காய்கறிகளை இலவசமாக கேட்ட்தற்கு மறுத்துவிட்டதால் பிரபலமாகிவிட்டான் இந்தச் சிறுவன்.

இதை அவமானமாக கருதிய போலீஸ்காரர்கள், சிறுவன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

பிபிசியிடம் பேசிய சுரேஷின் தந்தை இவ்வாறு கூறுகிறார்: "ஜிப்சியில் வந்த போலீஸ்காரர்களுக்கு காய்களை இலவசமாக கொடுக்காததுதான் என் மகன் செய்த குற்றம். இதனால் கோபமடைந்த போலீஸ்கார்ர்கள், 'பிறகு பார்த்துக் கொள்கிறோம்' என்று சவால் விட்டுச் சென்றார்கள்" என்று கூறுகிறார்.

மார்ச் மாதம் 19ஆம் தேதி மாலை ஏழரை மணிக்கு அப்பாவும் பிள்ளையும் காய்கறிகளை விற்றுவிட்டு வீடு திரும்பினார்கள். அகம்குவா காவல்நிலைய போலீசார், வீட்டில் இருந்த சுரேஷை கொண்டு சென்றார்கள்.

கவலையடைந்த அப்பா, மகனைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்றார். அலைந்து திரிந்து பல அதிகாரிகளை பார்த்த பிறகும், யாரும் அவர் கேட்டதை கண்டுக் கொள்ளவேயில்லை. பைக் திருடிய குற்றச்சாட்டில் சுரேஷை சிறையில் வைத்திருக்கும் தகவல் அவருக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 21ஆம் தேதியன்றுதான் தெரிந்தது.

சுரேஷின் வயது 14 என்பதை மறைத்து, 18 வயது என்று பொய்யான தகவலை எழுதி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் போலீசார்.

ஆதார் அட்டையில் இருந்த தகவல்களின் மூலமாக சுரேஷின் வயது 14 என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

விவகாரம் உள்ளூர் ஊடகங்களில் வெளியான பிறகு, மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்திய பிறகு 12 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பீகார்: லஞ்சமாக காய்கறிக்கு ஆசைப்பட்டு கூண்டோடு காணாமல்போன காவல் நிலையம்

பட மூலாதாரம், BRAJESH

இது மட்டுமல்ல, அகம்குவா காவல்நிலைய போலீஸ்காரர்களை நீக்கிய பட்னா மண்டல ஐ.ஜி நைய்யர் ஹஸ்னைன் கான், புதிய போலீசாரை பணியமர்த்த உத்தரவிட்டார்.

அதோடு, பட்னா நகர ஏ.எஸ்.பி ஹரிமோகன் சுக்லாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு மூன்று மாதமாக பிரச்சனைகளை எதிர்கொண்டுவந்த சுரேஷுக்கு சற்றே நிவாரணம் கிடைத்துள்ளது.

பிபிசியிடம் பேசிய சுரேஷின் தந்தை, "எங்களுக்கு இப்போது நியாயம் கிடைத்திருக்கிறது, இனி எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பம்

பட்னாவில் வாடகை வீட்டில் வசிக்கும் சுரேஷின் குடும்பம், மார்ச் மாதம் 19ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட மகனை வெளியில் கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளில் இரண்டு லட்ச ரூபாய் கடனாளியாகிவிட்டது.

வாழ்வாதாரத்திற்காக காய்கறி விற்பனை செய்யும் இந்த ஏழைக் குடும்பத்தில் யாருக்கும் கல்வியறிவு இல்லை. சுரேஷின் தங்கை மட்டும் அரசு பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறார்.

போலீசார் பிடித்துச் சென்ற பிறகு, இப்போது சில நாட்களுக்கு முன்னர்தான் மகனை மீண்டும் பார்த்த்தாக சொல்கிறார் சுரேஷின் அப்பா.

14 வயதே நிரம்பிய என் மகனை போலீஸ்கார்ர்கள் நைய புடைத்திருக்கிறார்கள். இப்போது அவன் வெளியே வந்துவிட்டாலும், போலீஸால் அவனுக்கு ஏற்பட்ட காயங்களும், எங்களின் மனவேதனைக்கும் யார் பதில் சொல்வது? என்று வேதனையுடன் கேட்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: