இனி அமெரிக்க விசா பெற உங்கள் ஃபேஸ்புக் கணக்கையும் காட்ட நேரிடலாம்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்யும் நபர்களின் சமூக ஊடக செயல்பாடுகளின் வரலாறு அனைத்தும் சேகரிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவர்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளின் தகவல்களையும் பெற வேண்டும் என அமெரிக்க அரசுத்துறை பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் பயன்படுத்திய சமூக ஊடக அடையாளங்களை, விண்ணப்பதாரர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இதனால், ஆண்டுக்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images
குடியேற்றம் மற்றும் குடியேற்றம் அல்லாத (Immigrant and non-immigrant visas) விசாக்கள் நாடுபவர்களையும் இந்த தகவல்களை வைத்து அடையாளம் காண இது உதவும்.
விண்ணப்பதாரர்களிடம், அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட பயண விபரங்களும் கேட்கப்படும்.
அவர்கள் ஏதேனும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்களா அல்லது அவர்களது உறவினர்கள் யாரேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது போன்ற தகவல்களும் கேட்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இந்த புதிய நடைமுறையால் பிரிட்டன், கனடா, ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு பிரச்சனை இல்லை. அவர்கள் அமெரிக்க செல்ல விசா தேவையில்லை. அவர்களுக்கு விசா இல்லாத பயண நிலையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
ஆனால், இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்து விடுமுறை அல்லது வேலை நிமித்தமாக அமெரிக்க செல்ல நினைப்பவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
சமூக ஊடக செயல்பாடுகளை வைத்து விசா - தற்போதைய நிலை என்ன?
கடந்த மே மாதம் கொண்டுவரப்பட்ட விதிகளின்படி, "ஒருவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலைப் பற்றி அறிய" இது போன்ற சமூக ஊடக தகவல்களை அதிகாரிகள் கேட்கலாம் என்று அமெரிக்க அரசுத்துறை கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்க முடியும் என்று அதிபர் டிரம்ப் முடிவெடுத்ததையடுத்து, இந்த சமீபத்திய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உதவும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதனை யார் முடிவெடுக்க முடியும்?
மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட்டை வைத்து இந்த யோசனை குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும்.
பேச்சுரிமையை பாதிக்குமா இத்திட்டம்?
தனி நபரின் சமூக ஊடக செயல்பாடுகளை சேகரிப்பது, அடிப்படை பேச்சுரிமையில் தலையிடுவது போல் உள்ளது என சிவில் உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
"சமூக ஊடகங்களில் பதிவிடும் சொந்த கருத்துகள் அரசு அதிகாரியால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் என்னாகும் என்று மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்படும்" என்று அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியனின் ஹினா ஷம்சி தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












