வழக்கை சந்திக்க நாடு திரும்பிய தென் கொரிய அதிபரின் தோழி

தென் கொரியாவில் ஆழமாகும் அரசியல் மோசடியின் மையமாக விளங்கும் பெண்மணி, அரசு விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தியதாகவும், தலையிட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நாடு திரும்பியுள்ளார்.

அதிபர் பார்க் குன் ஹை தன்னுடைய தோழியான சோய் சூன்-சிட்-இன் கட்டுப்பாட்டில் இருப்பதை போன்ற சித்தரிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் பார்க் குன் ஹை தன்னுடைய தோழியான சோய் சூன்-சிட்-இன் கட்டுப்பாட்டில் இருப்பதை போன்று சித்தரித்து காட்டிய போராட்டகாரர்கள்

அதிபர் பார்க் குன் ஹையின் நீண்டகால தோழியான சோய் சூன்-சிட், அதிகார பதவியோ, பாதுகாப்பு அனுமதியோ இல்லாமலேயே அரசு விவகாரங்களில் நெருக்கமாக ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அதிபரோடு அவர் வைத்திருந்த தொடர்பை பயன்படுத்தி, அவர் நிறுவிய அறக்கட்டளைகளுக்கு சோய் சூன்-சிட் பெருமளவில் நன்கொடை திரட்டியதாகவும் சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

போராட்டகாரர்கள்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவின் தலைநகர் சோலில் 20 ஆயிரம் போராட்டக்காரர்கள் குவிந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய புலனாய்வுக்கு அவர் ஒத்துழைப்பார் என்று சோய் சூன்-சிட்-இன் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தோழியுடன் வைத்திருந்த தொடர்புக்கு அதிபர் பார்க் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், அதிபர் பதவி விலக வேண்டும் என்று தென் கொரியர்கள் பலர் கோரிவருகின்றனர்.