மகான் - திரைப்பட விமர்சனம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானபோது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா?
படத்தின் கதை இதுதான்: காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் காந்தி. வளர்ந்து திருமணமாகி, ஒரு பையனும் பிறந்த பிறகு நாற்பது வயதில் ஒரே ஒரு நாள் வாழ்க்கையை தன் மனம் போனபோக்கில் வாழ நினைக்கும் காந்தி, ஒரு பாருக்குச் சென்று மது அருந்துகிறார். ஆனால், அதன் பிறகு அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிவிடுகிறது.
படத்தின் முதல் காட்சி குவெண்டின் டெரண்டினோவின் திரைப்படங்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. அதற்குப் பிறகு ஒரு நீண்ட ப்ளாஷ் - பேக். நீண்ட ஃப்ளாஷ் பேக்கிற்குப் பிறகு, பழைய நண்பன் சத்யவானைச் (பாபி சிம்ஹா) சந்திக்கும் காந்தி, அவனது சாராய தொழிலில் கூட்டாளியாகி, புதிய மதுபானத்தை அறிமுகப்படுத்தி, ஒருவரை (வேட்டை முத்துக்குமார்) எம்எல்ஏவாக்கி, துணை முதல்வராக்கிவிடுகிறார். அடுத்து இந்திய அளவில் ஏதாவது பதவியைக்கூட இந்தக் கூட்டணி வாங்கிவிடுமோ என்று நினைக்கும் நேரத்தில் ஸ்பீட் பிரேக்கராக அறிமுகமாகிறது தாதாபாய் நௌரோஜி (துருவ் விக்ரம்) பாத்திரம்.
பிறகு இந்த தாதாபாய் நௌரோஜிக்கும் காந்திக்கும் இடையிலான ஆடு - புலி ஆட்டம்தான் மீதிப் படம்.

படத்தின் முற்பாதி நிறைய லாஜிக் பிரச்னைகளோடு வேகமாக நகர்கிறது என்றால், பிற்பாதியில் ஏகப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளோடு விக்ரமையும் படம் பார்ப்பவர்களையும் சோதனைக்குள்ளாக்குகிறது திரைக்கதை. சத்யவானின் மகன் ராக்கி, காந்தி, தாதாபாய் நௌரோஜிக்கு இடையிலான சில காட்சிகள் 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் சில காட்சிகளை நினைவுபடுத்துகின்றன.
இந்தப் படத்தின் பெரிய பிரச்னையே, படம் பார்ப்பவர்கள் எந்தக் கதாபாத்திரத்துடனும் ஒன்றமுடியாமல் இருப்பதுதான். படத்தின் கதாநாயகனாக விக்ரம் அறிமுகமாகி, அவருடைய பாத்திரத்துடன் பார்வையாளர்கள் இணைந்து செல்லும்போது, பல இடங்களில், விக்ரமின் பாத்திரத்தைவிட மேம்பட்ட நிலையில் சத்யவானின் பாத்திரம் செயல்படுகிறது. ஒரு கட்டத்தில் மகன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் ஏற்றுக்கொண்டு, அவனைக் காப்பாற்ற காந்தி நினைக்கும்போது, மொத்தமாக அந்தப் பாத்திரம் கைவிடப்பட்ட பாத்திரமாகிவிடுகிறது. முடிவில் எல்லாப் பழியையும் துணை முதல்வர் மீது போட்டு, அவரைக் காலிசெய்து படம் முடிந்துவிடுகிறது.

ஒரு சின்னப் பிரச்னைக்கு பெரிதாக எதிர்வினையாற்றி, குடும்பத்தையே பிரித்த மனைவி, மாமனார் ஆகியோர்தான் வில்லன் என ஒருகட்டத்தில் தோன்றுகிறது. முடிவில், சத்யவான், துணை முதல்வர் ஆகியோரை கெட்டவர்களாக்கியிருக்கிறார் இயக்குநர். 'பழிவாங்குகிறேன்' என்ற பெயரில் பார்ப்பவர்களையெல்லாம் என்கவுன்டர் செய்யத் துடிக்கும் தாதாபாய் பாத்திரம் நினைத்ததுதான் நடக்கிறது. திரைக்கதையில் உள்ள இந்த குழப்பங்கள்தான் இதனை எவ்விதமான படம் என்று தீர்மானிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒட்டுமொத்தப் படத்தையும் தோளில் சுமந்து செல்கிறார் காந்தியாக வரும் விக்ரம். அட்டகாசமான நடிப்பு. அதற்கு அடுத்த இடத்தில் வருபவர் ராக்கியாக நடித்திருக்கும் சனாந்த். நல்ல பாத்திரங்கள் அமையும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் அவர் ஒரு பெரிய சுற்றுவரக்கூடும். பாபி சிம்ஹாவின் நடிப்பு ஓகே ரகம். துருவ் விக்ரமின் தோற்றத்திற்கும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பொருத்தம் இல்லை என்பதால், அவர் கடுமையாக முயற்சித்தும் பெரிதாகக் கவரவில்லை.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பல பாடல்கள் இருந்தாலும் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால், படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது.
'ஜகமே தந்திரம்' படம் தந்த வீழ்ச்சியிலிருந்து கார்த்திக் சுப்புராஜ் மீண்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பை மகான் ஏற்படுத்தியிருந்தது. மீண்டிருக்கிறார். ஆனால், முழுமையாக அல்ல.

பிற செய்திகள்:
- சசிகலா, இளவரசி மீதான லஞ்ச வழக்கு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா வெளியிட்ட முக்கிய தகவல்
- நரேந்திர மோதி: "எது கூட்டாட்சி தெரியுமா?" - பொங்கிய பிரதமர் - ராகுல் என்ன சொன்னார்?
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொங்கு மண்டலத்தில் கள நிலவரம் என்ன?
- ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













