சன்னி லியோனுக்கு 3 நாட்கள் கெடு விதித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

பட மூலாதாரம், Saregama music youtube channel screengrab
சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள ''மதுபன் மே ராதிகா'' எனும் பாடல் காணொளியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ளார்.
இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அந்தப் பாடலில் நடனம் ஆடிய சன்னி லியோன் மற்றும் இசை அமைத்த சாகிப் டோஷி ஆகியோருக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இவ்வாறு கெடு விதித்துள்ளார்.
1960ஆம் ஆண்டு வெளியான ''கோகினுர்'' எனும் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் ரீமேக் சரிகமா நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்துக் கடவுள்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை இடையேயான காதலை விவரிக்கும் வகையில் இந்தப் பாடல் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். பாடகர்கள் கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்கரவர்த்தி ஆகியோர் புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
இந்தப் பாடலின் காட்சிகளில் சன்னி லியோன் ''ஆபாசமாக நடனமாடி உள்ளதாக'' ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சமூக ஊடகங்களிலும் இதற்கு எதிரான பல பதிவுகள் வெளியாகி வருகின்றன.
''சிலர் இந்துக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தி வருகிறார்கள்; ராதைக்கு கோயில் கட்டி நாம் வணங்குகிறோம்; சாகிப் டோஷி அவர் மதம் தொடர்புடைய பாடல்களை வேண்டுமானால் உருவாக்கலாம்; ஆனால் இத்தகைய பாடல்கள் எங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மூன்று நாட்களுக்குள் அந்த காணொளி நீக்கப்பட்டாவிட்டால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்," என்று நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தப் பாடல் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு, இதன் தலைப்பும் மாற்றப்படும் என 'சரிகமா மியூசிக்' தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"சன்னி லியோனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து அவரது பாடல் காணொளியை தடை செய்யவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்," என உத்தர பிரதேசத்தின் விருந்தாவன் நகரில் உள்ள இந்து சாமியார் சந்த் நாவால் கிரி மகராஜ் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை சனியன்று செய்தி வெளியிட்டது.
இந்த சாமியார் ''சன்னி லியோன் இந்த நாட்டில் வசிக்க அனுமதிக்கப்பட வேண்டுமானால், வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றும் தெரிவித்துள்ளார்.

நரோத்தம் மிஸ்ராவும் இதற்கு முன்னரும் இவ்வாறான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஒருபால் உறவில் உள்ள இரண்டு பெண்கள் (லெஸ்பியன்) இந்துக்கள் கொண்டாடும் 'கர்வா சவுத்' விழாவைக் கொண்டாடுவதை காட்டும் டாபர் நிறுவனத்தின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு எழுந்த பொழுது நரோத்தம் மிஸ்ரா அப்போதும் டாபர் நிறுவனத்தை கண்டித்திருந்தார்.
அதன்பின்பு டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக சில வட இந்திய மாநிலங்களில் உள்ள பெண்கள் 'கர்வா சவுத்' எனும் விழாவை அனுசரிக்கிறார்கள்.
வடிவமைப்பாளர் சப்யாசாச்சி முகர்ஜி அக்டோபர் மாதம் வெளியிட்ட 'மங்கல் சூத்ரா' (தாலி) விளம்பரம் ஆபாசமாக இருப்பதாக கண்டனம் எழுந்த பொழுது நரோத்தம் மிஸ்ராவும் சப்யாசாச்சி முகர்ஜியை கண்டித்து இருந்தார். அதன் பின்பு இந்த விளம்பரமும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
பிற செய்திகள்:
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் இலங்கை அமைச்சர்
- நரேந்திர மோதி அரசு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறதா?
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








