'ஜெயில்' ஜிவி பிரகாஷ்குமார் பேட்டி: "வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் கதாநாயகனாக நடிப்பேன்"

    • எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'வெயில்', 'தாண்டவம்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அசுரன்' என வரிசையாகப் படங்களைத் தந்த முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

நடிகராக 'டார்லிங்' படத்தில் அறிமுகமான இவர் 'நாச்சியார்', 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தனது கதாபாத்திரங்கள் மூலமாக கவனம் பெற்றார். தற்போது, வசந்தபாலன் இயக்கத்தில் 'ஜெயில்' வெளியீட்டில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினேன்.

'பேச்சுலர்', 'ஜெயில்' என நடிப்பு, இசைக்காக அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். எப்படி இருக்கிறது?

இரண்டு வருடங்கள் கொரோனா காரணமாக படமே எதுவும் வெளிவராமல் இருந்தது. இப்போது திடீரென எல்லாமே ஒன்றாக வெளியாகிறது. இந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து என்னுடைய பட வெளியீடு அமைந்து விட்டது. அதுமட்டும்ல்லாமல், அடுத்த வருடம் ஜனவரி, பிப்ரவரியில் பல பெரிய படங்களும் வெளியாக இருக்கின்றன.

மேலும், 'ஜெயில்' படத்தின் தயாரிப்பாளருக்கு விசா முடிய இருக்கிறது. இந்த படத்தை வெளியிட்டு விட்டுதான் அவர் கிளம்ப வேண்டும். இப்படியான காரணங்களும் இருக்கின்றன.

வசந்தபாலன் 15 வருடங்களுக்கு முன்னால் 'வெயில்' படம் மூலம் உங்களை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இப்போது அவர் கதையான 'ஜெயில்'லில் நீங்கள் கதாநாயகன். கதைக்காக உங்களை அவர் அணுகினாரா அல்லது அவருடன் படம் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களா?

மீண்டும் இருவரும் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. அப்போது ஒரு நாள் இயக்குநர் வசந்தபாலன் என்னிடம் நடிக்க கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டேன். கதை கேட்காமல்தான் முதலில் ஒத்து கொண்டேன். ஆனால், வசந்தபாலன் கதை கேட்க வேண்டும் என்று சொல்லி கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் கதை சொன்னார். கதை கேட்ட பின்பு பிடித்திருந்தது. இவ்வளவு நல்ல கதையை எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

'ஜெய்பீம்' போல வலுவான கருத்தை சொல்லும் படம் 'ஜெயில்' என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். அது குறித்து விரிவாக சொல்லுங்கள்?

'பேரிடர் இடமாற்றம்' என்ற விஷயத்தை இதில் பேசி இருக்கிறோம். சேரி பகுதிகளில் இருந்து மக்களை இடம் மாற்றுதல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான். இந்த நகரத்தை உருவாக்கிய ஆதி குடிகளை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்கிறோம். அது மிகப்பெரிய தவறு. அதை ஒரு நல்ல எண்ணத்தில் அரசு செய்தாலும் அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் அதில் இருக்கக்கூடிய தவறுகளையும் கவனிக்க தவறி விட்டார்கள். அதை சரி செய்வதற்கான விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த பிரச்சனையை பேசக்கூடிய ஒன்றாக, இந்திய சினிமாவில் முக்கியமான படமாக 'ஜெயில்' இருக்கும்.

படத்தில் காவேரி நகர் என குறிப்பிடப்படும் பகுதியின் வாழ்க்கை முறை, சூழல் எல்லாமே உங்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்திருக்கும். எப்படி தயாரானீர்கள்?

அதற்காக நிறைய வேலை செய்தோம். ஏனென்றால், படப்பிடிப்பு தளமே எங்களுக்கு சவாலான ஒன்றாகதான் இருந்தது. 48 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதில் அதிக சண்டை காட்சிகளும் இருந்தன. படத்தின் முன்னோட்டத்தில் நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். கட்டடத்தின் மீதுள்ள குழாய் ஒன்றில் இருந்து இறங்கி வருவது போல காட்சி எடுத்திருப்போம். கிரேன் போட்டு கயிறு கட்டி எடுத்த காட்சி அது. இப்படி காட்சிகள் மட்டுமல்ல கதையுமே படமாக்குவதற்கு சவாலாக இருந்த ஒன்றுதான். இதையெல்லாம் தாண்டி நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்திருக்கிறோம்.

இதற்கு முன்பு உங்கள் இசையில் நடிகர் தனுஷை பாட வைத்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது நீங்கள் நடிக்கும் படத்தில் முதன் முதலாக அவரை பாட வைத்தது எப்படி நிகழ்ந்தது?

திடீரென நிகழ்ந்த ஒன்றுதான் அது. 'காத்தோடு காத்தானேன்' பாடலின் ட்யூன் மிக பிடித்து போய் அவரே பாட முன் வந்தார். எனக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி.

ஏனென்றால், ஒரு பாடலை கேட்டு விட்டு பிடித்து போய் 'நானே பாடுகிறேன்' என தனுஷ் முன் வந்தது பெரிய விஷயம். அதிதி, ஒரு நாள் அந்த பாடலை தனுஷிடம் போட்டு காண்பித்திருக்கிறார். 'நன்றாக இருக்கிறது, நான் பாடுகிறேன்' என அவர் சொன்னதும் நான் உடனே அவரிடம் பேசி அந்த பாடலை பதிவு செய்தோம்.

இசையமைப்பாளராக இருந்த உங்களுக்குள் இருந்த நடிகரை முதன் முதலில் கண்டறிந்தது யார்? அந்த அழைப்பு வந்தபோது என்ன உணர்ந்தீர்கள்?

'வெயில்' படத்திற்கு இசையமைக்கும் போதே, முதல் சந்திப்பில் வசந்தபாலன் அந்த படத்தில் கதிர் கதாப்பாத்திரத்தில் என்னை நடிக்க கேட்டார். ஆனால், அப்போது எனக்கு நடிப்பு தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்பதால் மறுத்து விட்டேன். அதன் பிறகு, ஏ. ஆர். முருகதாஸ் அவர்தான் என்னை நடிக்க அழைத்தது. அந்த படம் குறித்தான அறிவிப்பு வந்ததும் அடுத்தடுத்து நிறைய படங்களுக்கான வாய்ப்பு வந்தது. 'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல்ராஜா அவர்தான் 'டார்லிங்' படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஆனால், ஏ. ஆர். முருகதாஸ் படம் நடிக்க அழைத்தபோது நான் வேண்டாம் என்றுதான் மறுத்தேன். அது இசை தொடர்பான படம் என்பதால் என் முகம் பார்வையாளர்களுக்கு பொருந்தும் என்ற நம்பிக்கை கொடுத்தது அவர்தான். அவர் சொல்லும்போது முயன்று பார்க்கலாம் என்று ஆரம்பித்ததுதான்.

இசைச்சூழல் என்பது உங்களுக்கு சிறுவயதிலேயே பழக்கப்பட்டிருக்கும். ஆனால், நடிப்பு இடையில் வந்த வாய்ப்பு. முதலில் கேமரா முன்னால் நடிக்க நின்றபோது எப்படி இருந்தது?

நிறைய தடுமாற்றங்கள், கேமரா பயம் எல்லாமே இருந்தது. ஏனென்றால், அவ்வளவு நாட்கள் நான் ஸ்டுடியோவிற்குள்ளேயே இசையமைப்பு செய்திருந்ததும் ஒரு காரணம். பின்பு, 'ஆடுகளம்' நரேன் அவரிடம் நடிப்பிற்காக பயிற்சி எடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேமரா பயம் குறைந்தது. இயக்குநர் பாலாதான் நடிகராக எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தார். 'ரொம்ப நல்லா நடிச்சிருக்க' என 'நாச்சியார்' படத்தில் அவர்தான் என்னை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

பின்புதான் ஒரு கதாபாத்திரத்திற்கான தோற்றம், உடல் மொழி, குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்திற்கான அடையாளத்தை எப்படி உருவாக்கலாம் என அதில் கவனம் செலுத்தி வேலை பார்க்க தொடங்கினேன். இதற்கான கதவை திறந்து விட்டது இயக்குநர் பாலாதான்.

நடிகராக கதைகள் தேர்ந்தெடுக்கும் போது உங்கள் கதாப்பாத்திரங்களில் என்னென்ன விஷயங்கள் கவனிப்பீர்கள்?

பார்வையாளர்கள் கதையோடு தங்களை பொருத்தி பார்க்கும்படியாக கதையும், என் கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அவர்கள் வாழ்க்கையில் நடந்த எதோவொரு விஷயத்தோடு அவர்கள் பொருந்திப்போக வேண்டும் இல்லையென்றால் எதாவது ஒரு பிரச்சனையை பேச வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் 'இது நம்ம கதையோ!' என பார்வையாளர்கள் உணர்ந்தால் போதும்.

படத்திற்கான வெற்றி, தோல்வி என வரும்போது இசையமைப்பாளராக அது உங்களை பெரிதும் பாதிக்காது. ஆனால், நடிகராக இது உங்களை நேரிடையாக பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம். எப்படி அதை சமாளிக்கிறீர்கள்?

கடினமான ஒன்றுதான். ஏனென்றால் நடிகர் எனும்போது உங்களுக்கான பொறுப்பு அங்கு அதிகமாகிறது. வந்தோம் நடித்தோம் என இருக்க முடியாது. நடிகரை சார்ந்துதான் படத்தின் வியாபாரமும் இருக்கிறது. அதனால் அவ்வளவு எளிதாக இருக்க முடியாது என்றவரிடம் இது ஒரு அழுத்தமாக மாறியிருக்கிறதா என்று கேட்டபோது, நிச்சயமாக என்கிறார்.

நடிகரான பின்பு உங்களுக்கென்று ஒரு வியாபாரம் வந்துவிட்டது என்றால், அதற்கு பிறகு நீங்கள்தான் பொறுப்பு. ஆனால், அதற்காக நீங்கள் பயந்து ஓடிவிட முடியாது. எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றியாக மாற்ற வேண்டும். இதை நோக்கிதான் பயணித்து கொண்டு இருக்கிறேன்.

ஒரு பக்கம் நடிகராகவும் நிறைய படங்கள் நடித்து கொண்டு இருக்கிறீர்கள். இன்னொரு பக்கம் இசையமைப்பிற்கும் பல பெரிய படங்கள் ஒப்பந்தமாகி உள்ள. எப்படி இரண்டையும் சமாளிக்கிறீர்கள்?

திட்டமிடுதல்தான். இதற்காக சரியான முன் திட்டமிடுதல் அவசியம். கடைசி நேரத்தில் வேலை பார்க்கக் கூடாது. எல்லாமே சரியான நேரத்தில் எடுத்து செய்யாமல் தள்ளி போட்டால் நிச்சயம் அது நம்மை பாதிக்கும்.

நடிகராக நீங்கள் ஆரம்பத்தில் கதைகள் தேர்ந்தெடுத்ததற்கும் இப்போது தேர்ந்தெடுப்பதற்கும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அணுகுமுறை, கதை தேர்ந்தெடுக்கும் காரணம் போன்றவை நிச்சயம் நடிகராக மாறும். இசையமைப்பாளராக படங்கள் தேர்ந்தெடுக்கும் போது, இந்த காட்சியில் இசையமைக்க நமக்கு என்ன மாதிரியான வாய்ப்பு இருக்கிறது என்றுதான் யோசிப்போம்.

அதுவே நடிகர் எனும்போது இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்க வேண்டும் என யோசிப்பேன். எனவே, இசையமைப்பாளருக்கும் நடிகருக்கும் வேறுபாடு உண்டு.

நடிகராக நீங்களே உங்களை மதிப்பீடு செய்வீர்களா?

இது ஒரு மிகப்பெரிய கடல். முழுதாக நாம் எதையும் கற்று கொண்டோம் என சொல்ல முடியாது. நடிகராக, பாடகராக, இசையமைப்பாளராக நான் கற்றுக்கொள்ள வேண்டியதும், மெருகேற்றி கொள்ள வேண்டியதும் நிறைய உள்ளது. நான் இன்னும் எதுவுமே பெரிதாக செய்யவில்லை என்பதுதான் உண்மை. இதையெல்லாம் தாண்டி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்த படங்கள் எது என்று கேட்டேன்.

சில படங்கள் திருப்தி அளிப்பதாக இருந்தது. இசையில் 'ஆயிரத்தில் ஒருவன்', நடிப்பில் 'நாச்சியார்', 'ஜெயில்', 'பேச்சுலர்' ஆகிய படங்களை சொல்லலாம். 'சர்வம் தாளமயம்' படத்தில் இசையில் சில விஷயங்கள் புதுமையாக செய்தது எனக்கு பிடித்திருந்தது. ஆனால், இசையிலும் நடிப்பிலும் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

அடுத்தடுத்து படங்கள், இசையமைப்பு என போய் கொண்டிருக்கிறது. குழந்தையுடன் நேரம் செலவிட முடிகிறதா?

நிச்சயமாக. அவர் பிறந்ததே கொரோனா சமயத்தில்தான். அதனால், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேல் அவருடன் இருந்தேன்.

பாலா, வசந்தபாலன் படங்களில் இசையமைத்து, நடிக்கவும் செய்தாயிற்று. இதேபோல, நீங்கள் அதிகம் வேலை பார்த்திருக்கும் இயக்குநர்களான ஏ. எல். விஜய், வெற்றிமாறன் படங்களில் நடிகராக எப்போது பார்க்கலாம்?

ஏ.எல். விஜய் படத்தில் நடித்திருக்கிறேன். வெற்றி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது நடக்கவில்லை. ஒருவேளை, அது எதிர்காலத்தில் நடக்கலாம். அது ஒரு பீரியாடிக் ஃபிலிம். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நடக்கும்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: