You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாரிதாஸ் என்ற பா.ஜ.க. ஆதரவு யூடியூபர் மதுரையில் கைது - தமிழ்நாடு, காஷ்மீர் குறித்து சர்ச்சை ட்வீட்
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் என்பவரை மதுரை மாநகரக் காவல்துறை கைதுசெய்துள்ளது. மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை இதனைக் கண்டித்துள்ளார்.
மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இன்று காலையில் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் மாரிதாஸை அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்தனர்
விசாரணைக்காக தங்களுடன் காவல்நிலையத்திற்கு வரும்படி மாரிதாஸை அழைத்தபோது, அவர் "தன்னை விசாரணைக்கு அழைக்க சம்மன் இருக்கிறதா?" என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குள் மாரிதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் வந்த தகவலை அறிந்து மாரிதாஸ் வீட்டின் முன்பாக பா.ஜ.கவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர். அங்கிருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு காவல்துறையினர் மாரிதாஸை கே. புதூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தற்போது மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் விடுத்திருக்கும் ட்விட்டர் செய்தியில் "மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!"
"ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. "
"ஒருபக்கம் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொரு பக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று மாரிதாஸ் தனது யு டியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரே காரணம் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரில், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505(2), 67பி என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டின் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் குறித்தும் இவர் வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சில பத்திரிகையாளர்கள் இவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்ததில், குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: