You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு
ஓராண்டுக்கு மேலாக டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து நடத்தி வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இன்று வியாழக்கிழமை சிங்கு எல்லைப் பகுதியில் நடந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் இயக்கம்) தலைவர்களின் கூட்டத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்டது.
தங்கள் இயக்கத்தை இடை நிறுத்துவதாகவும், போராடும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அரசு அளித்த வாக்குறுதியை ஏற்பதாகவும், டெல்லி எல்லைகளில் இருந்து வீடு திரும்புவதாகவும் விவசாயிகள் தலைவர்கள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.
முக்கியமாக மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாபில் தொடங்கிய இந்தப் போராட்டம், 2020 நவம்பர் மாதம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.
டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நிரந்தரமாக அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு காரணங்களால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர் என்கிறார்கள் போராட்டத்தை நடத்தும் விவசாயிகள்.
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் மீது மத்திய அமைச்சர் மகன் தொடர்புடைய கார் விட்டு ஏற்றப்பட்டதில் விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோதி கடந்த மாதம் அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டு குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்டபிறகுதான் போராட்டத்தை முடித்துக்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டும், அது தொடர்பாகப் பேசவேண்டும். அதன் பிறகே போராட்டம் முடிவுக்கு வரும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படும் என்றும், அதில் சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், தற்போது போராட்டத்தை இடை நிறுத்துவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: