You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு: சித்ரவதைக்கும் பாலியல் துன்புறத்துலுக்கும் ஆளாக்கப்பட்ட பெண் கைதிகள்
- எழுதியவர், லாரா ஒவன் மற்றும் கோ கோ ஆங்
- பதவி, பிபிசி உலகச் சேவை
மியான்மரிலுள்ள பெண்கள் காவலில் இருந்த போது, சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும், பாலியல் வன்முறை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர் என பிபிசிக்கு கிடைத்த பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டை ராணுவம் கைப்பற்றியதை எதிர்த்து போராடிய ஐந்து பெண்கள் கைதுச்செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின், தடுப்புகாவலிலில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கும் சித்ரவதைக்கும் ஆளாக்கப்பட்டனர் என்று கூறுகின்றனர்.
அப்பெண்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் பதிவுகளில் அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் வரும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விவரிப்புகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
கடந்த பிப்ரவரியில் மியான்மரை ராணுவம் கைப்பற்றியது முதல், ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில், பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். மியான்மரில் ராணுவம் இதற்கு முன் ஆட்களை காணாமல் போகச் செய்வது, சிறைப்பிடிப்பது மற்றும் சித்ரவதை உத்திகளைப் பயன்படுத்தியிருந்தாலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, வன்முறை அதிகரித்துள்ளது என மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
அரசியல் சிறைக்கைதிகளுக்கான உதவி சங்க அமைப்புப்படி (Assistance Association for Political Prisoners (AAPP)), டிசம்பர் 8 ஆம் தேதி நிலவரப்படி, ஜனநாயக இயக்க போராட்டங்கள் தொடர்பாக, ராணுவம் 1,318 பேரைக் கொன்றுள்ளது. இந்த அமைப்பு தன்னார்வல மனித உரிமை அமைப்பாகும்.
இவர்களில் 93 பேர் பெண்கள். அதிலும் எட்டு பெண்கள் காவலில் இருந்த போதே உயிரிழந்தனர். அவர்களுள் நான்கு பேர், விசாரணை மையத்தில் சித்ரவதைக்கு உள்ளாகி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 10,200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதில், 2,000க்கும் மேற்ப்பட்டோர் பெண்கள் என்கிறது மற்றொரு தரவு.
ஜனநாயாக ஆர்வலர் இன் சோய் மே (Ein Soe May) கிட்டதட்ட ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மிரில் சர்ச்சைக்குரிய விசாரணை மையங்களில் ஒன்றில், அவர் முதல் 10 நாட்களைக் கழித்தார். அங்கு அவர் பாலியல் துன்புறத்தலுக்கும், சித்ரவதைக்கும் ஆளானதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஒருநாள் காலை, போராட்டத்திற்காக சுவரொட்டி தயாரிக்கும்போது, அவர் கைது செய்யப்பட்டு, ஒரு வேனின் பின்புறத்தில் ஏற்றப்பட்டார் என்று சோய் மே பிபிசிடம் கூறுகிறார்.
"(வெளிப்படுத்தப்படாத இடத்திற்கு) நான் சென்றடைந்தப்போது இரவாகிவிட்டது. என் கண்ணைக் கட்டிவிட்டு, கற்பனை பொருள்களை கடந்து செல்வதைப் போல் செய்தனர். அப்போது, நான் விசாரனை அறைக்கு சென்றேன். அதனால், என்னை ஏமாற்றலாம் என்று நினைத்தனர்", என்று சோய் மே கூறுகிறார்.
அவரை கைது செய்தவர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பிடிக்காத ஒவ்வொரு பதிலுக்கும், மூங்கில் பிரம்பால் அவரை அடித்தனர்.
அவரது பாலியல் வாழ்க்கை குறித்த விவரங்கள் தொடர்ந்து கேட்கப்பட்டதாக சோய் மே கூறுகிறார். "இங்கு வரும் பெண்களை நாங்கள் என்ன செய்வோம் என்று உனக்கு தெரியுமா? நாங்கள் அவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, கொன்று விடுவோம்", என விசாரணை செய்யும் ஒருவர் அச்சுறுத்தியதாகக் கூறினார்.
கண்கட்டியிருந்த போது, அவர் பாலியல் துன்புறத்துலுக்கு ஆளாக்கப்பட்டார். "நான் அணிந்திருந்த மேல் சட்டையைக் கிழித்தனர். என் உடலை வெளிப்பட்டு இருந்த போது, அவர்கள் என்னைத் தொட்டனர்", என்று கூறுகிறார்.
பின்னர் கண்கட்டை அவிழ்த்துவிட்டனர். காவலர்களில் ஒருவர் தன் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டை மட்டும் எடுத்தார்.
அவர் தன் தொடர்புகள் குறித்த தகவல்களைக் கொடுக்காத போது, அவரின் வாயைத் திறக்க வைத்து, சுடத் தயாராக குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை வாயில் வைத்து அடைத்தனர் என்று கூறினார்.
தற்காலிக காவல் மையங்கள்
இந்த விசாரணை மையங்கள் தற்காலிக முகாம்கள் போன்றதே. ராணுவ வீரர்கள் குடியிருப்பில் ஓர் அறையாக இருக்கலாம் அல்லது பொது இடங்களில் தனித்துவிடப்பட்ட இடமாக இருக்கலாம்" என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆராய்ச்சியாளர் மேனி மாங்.
பிபிசியிடம் பேசிய மியான்மரைச் சேர்ந்த வழக்குரைஞர் இதனை உறுதிப்படுத்துகிறார். ஆனால், பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். விசாரணைகளின்போது, பல கைதிகள் சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்ட பல கைதிகளுக்கு ஆதரவாக அவர் முன்நின்றுள்ளார் என்று கூறுகிறார்.
என்னிடம் வந்தவர்களில் ஒருவர் தவறாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் அதிகாரிகளிடம் அவர்கள் தேடும் நபர், தான் இல்லை என்று விவரித்தப்போது, அவர் சுயநினைவு இழக்கும் வரை இரும்புத் தடியால் தொடர்ந்து அவர் முழங்காலில் அடித்தனர் என்கிறார் அந்த வழக்குரைஞர்.
பின்னர், அந்த பெண் மற்றொரு விசாரணை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால், அவரை விடுதலை செய்வதாக ஓர் ஆண் காவலர் கூறியதாக அவர் குற்றம் சாட்டுக்கிறார். மியான்மரில் சட்ட அமைப்பு மிகவும் இருள் சூழ்ந்துள்ளது. அவரைப் போன்று உள்ள வழக்க்குரைஞர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
"கைதுகளையும் விசாரணைகளையும் நாங்கள் எதிர்கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால், இந்த செயற்பாடுகள் சட்டப்பூர்வமானது என்றும், விசாரிப்பவர்களுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது என்றும் எங்களுக்கு கூறப்படுகிறது".
சோய் மேவின் குற்றச்சாட்டை நம்மால் சரிப்பார்க்க இயலவில்லை என்றாலும், மற்ற பெண் கைதிகளிடம் பிபிசி பேசியபோது, விசாரணை மையங்களில் அவர்களும் சித்ரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
"ஒரு காவலர் என் தலைமூடியை பிடித்து துன்புறுத்தி, கிட்டதட்ட ஒரு மணிநேரம் மூன்று விரல் சல்யூட் (மியான்மரில் அதிகாரத்தை எதிர்க்கும் குறியீடு) செய்யுமாறு வற்புறுத்தினர்." என கைதுசெய்யப்பட்டவர் ஒருவர் கூறினார்.
ஷ்வீ ப்யி தார் நகரத்தில் உள்ள விசாரணை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், "அறையில் இருந்த பெண்களை வெளியில் இழுத்தனர். திரும்பி வரும் போது சில பெண்களின் ஆடையில் இருந்த பட்டன்கள் முறையாக அணியப்படாமல் இருந்தது அல்லது பட்டன்கள் காணாமல் போயிருந்தது."
'போலி செய்தி'
மியான்மரின் தகவல் துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் சாவ் மின் துன்னிடம் (Maj Gen Zaw Min Tun) சோய் மேவின் வாக்குமூலத்தை பிபிசி பகிர்ந்தது. அவர் ராணுவம் சித்ரவதை செய்ததை மறுத்துள்ளார். மேலும், இது 'போலி செய்தி' என்றும் நிராகரித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், ராணுவம் ஒரு பெண் கைதியின் புகைப்படத்தை ஒளிபரப்பியது. அவரது முகம் அடையாளம் தெரியாத வகையில் தாக்கப்பட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலானது. அயுத புகாரில் அவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
காயங்களை ராணுவம் ஏன் மறைக்கவில்லை என்று மேஜர் ஜெனரல் சாவ் மின் துன்னிடம் பிபிசி கேட்டது. "கைதுகளின் போது இப்படி ஏற்படலாம். அவர்கள் தப்பிக்க முயற்சி செய்வார்கள். நாங்கள் அவர்களை பிடிக்க வேண்டும்", என்று கூறினார்.
தனிமையில் சிறைப்பட்ட நிலை
ரகசிய விசாரணை இடங்களில் மட்டுமே பாலியல் துன்புறுத்தல் நடப்பதில்லை.
50களில் இருக்கும் செயற்பாட்டாளர் ஒருவரை லின் என்று நாங்கள் அழைக்கிறோம். யங்ஜனின் உள்ள இன்செயின் சிறையில் கிட்டதட்ட 40 நாட்களுக்கு எவ்வாறு அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்று விவரித்தார்.
லினின் சிறையில் அவர் அணிந்திருந்த உடைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை, தேவையான மருந்து கூட இல்லை. அவர் காவலில் இருந்தபோது பலவீனமடைந்து வந்தார்.
"நான் இருட்டில் படுத்துக் கொள்வேன், நான் இறந்துவிடுவேன் என்று கவலைப்படுவேன்," என்று அவர் கூறினார். "சில சமயங்களில், அருகில் இருந்த செல்களில் இருந்து அலறல் மற்றும் அழுகை சத்தம் கேட்டது. யாரை அடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன்." என்கிறார்.
ஒரு நாள் ஓர் ஆண் அதிகாரி பல பெண் அதிகாரிகளுடன் தனது அறைக்குள் நுழைந்ததை அவர் விவரிக்கிறார்.
"அவர்கள் வெளியேறத் தயாராக இருந்தபோது, ஆண் அதிகாரி என்னை காணொளியாக படமெடுப்பதை நான் கவனித்தேன்," என்று அவர் கூறினார். அவர் புகார் அளித்தார், ஆனால் அது "வீண்" என்று கூறினார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் மேனி மாங் பிபிசியிடம் கூறுகையில், பெரும்பாலும் சிறைகளில் சுமார் 500 பெண்கள் அதிகபட்சமாக 100 கைதிகளுக்கு போதுமான பெரிய அறைகளில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் படுக்க முடியாது என்பதால், அவர்கள் மாறி மாறி தூங்க வேண்டும்.", என்று கூறுகிறார்.
அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம் மறுக்கப்படுகிறது, அத்தகைய நடவடிக்கை 'அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பது' என்று அவர் கூறினார்.
ஷ்வே பை தார் விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணும் சிறையில் இதை அனுபவித்தார்.
"விசாரணை மையங்களில் இருந்து வந்த பெண்களுக்கு ஆறாத காயங்கள் இருந்தன, சிலருக்கு மாதவிடாய் இருந்தது, ஏழு நாட்கள் காவலில் இருந்த பிறகு மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.
அக்டோபரில் 5,000 க்கும் மேற்பட்ட கைதிகளின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட சோ மே, தன் செயல்பாடுகளால் தான் மீண்டும் கைது செய்யப்பட்டலாம் என அச்சப்படுவதற்கு உகந்தது என்கிறார்.
"நான் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு எப்போதும் இருப்பதை நான் அறிவேன், நான் இறக்கக்கூடும், ஆனால் நான் என் நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
"நான் பாதுகாப்பாக உணரவில்லை என்றாலும், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்."
விளக்கப்படங்கள் வரைந்தோர்: டேவிஸ் சூர்யா மற்றும் ஜில்லா தஸ்மால்ச்சியின் .
பிற செய்திகள்:
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல்
- ஆன்டி இண்டியன் பட இயக்குநர் ப்ளூசட்டை மாறன்: "படத் தலைப்பு தந்த எச்.ராஜாவுக்கு நன்றி"
- சீரியல் குற்றம்: மூதாட்டிகளை கொன்று, பிணங்களோடு உடலுறவு கொண்டதாக ஒருவர் கைது
- மாரிதாஸ் என்ற பா.ஜ.க. ஆதரவு யூடியூபர் கைது
- முடிவுக்கு வருகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: