You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாநாடு - சிம்பு, எஸ்.ஜே. சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ்; இசை: யுவன் சங்கர் ராஜா; ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்; இயக்கம்: வெங்கட் பிரபு.
ஒரு நபருக்கு ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நடப்பதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார்கள். இந்தியாவில் அம்மாதிரி முயற்சிகள் மிகக் குறைவு என்றாலும் கடந்த வாரம்தான் இதே போன்ற 'Time - loop' பின்னணியில் 'ஜாங்கோ' என்ற படம் வெளியாகியிருந்தது. இப்போது மீண்டும் அதே பாணியில் ஒரு திரைப்படம்.
துபாயில் பணியாற்றும் அப்துல் காலிக் (சிம்பு) நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறான். திருமணம் செய்யப்போகும் பெண்ணையும் அவளைக் காதலித்த தன் நண்பனையும் சேர்த்துவைப்பதுதான் காலிக்கின் திட்டம். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணைக் கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்துவைக்கப் போகும்போது, ஒரு விபத்து நடந்துவிடுகிறது.
அதில் ஏற்படும் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலமைச்சரைக் கொல்ல வேண்டுமெனக் கூறுகிறார் காவல்துறை அதிகாரியான தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா). முதலமைச்சரைக் கொன்று விடுகிறான் அப்துல் காலிக். பிறகு காவல்துறை அவனைக் கொன்றுவிடுகிறது. சட்டென விழித்துப் பார்த்தால், காலிக் மீண்டும் விமானத்தில் இருக்கிறான்.
அப்போதுதான் தான் ஒரு Time - loopல் சிக்கியிருப்பது அவனுக்குப் புரிகிறது. இதையடுத்து தானும் தப்பிக்க வேண்டும், முதலமைச்சரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக காலிக் மேற்கொள்ளும் முயற்சிகளே மீதிப் படம்.
காலிக் இறந்துவிட்டால், கதை மீண்டும் முதலில் இருந்து துவங்கும். முதலமைச்சரைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியடைந்தால், காலிக் சாக வேண்டும். அப்போதுதான் அவனால் முதலில் இருந்து மீண்டும் காப்பாற்றும் முயற்சியைத் துவங்க முடியும்.
இந்த விஷயம் வில்லனுக்குத் தெரிந்துவிடுவதால், காலிக்கை சாகவிடமாட்டான். இப்படி ஒரு சிக்கலான காலப் பயணத்திற்குள் நடக்கும் ஓர் ஆடு - புலி ஆட்டம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு அதை புரியும் வகையில் படமாக்கியிருக்கும் வெங்கட் பிரபுவுக்கு முதலில் ஒரு hats off. படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை ஒரே சீரான வேகத்தில் செல்கிறது.
எந்த இடத்திலும் குழப்பமே ஏற்படுத்தாமல் திரைக்கதையில் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். படத்தொகுப்பை செய்திருக்கும் கே.எல். பிரவீணுக்கு இது நூறாவது படமாம். இந்தப் படத்தின் படத் தொகுப்பைப் பார்த்தால், அவர் எப்படி நூறு படங்களுக்குத் தாக்குப்பிடித்தார் என்பது புரிந்துவிடும். பிரமாதமான படத் தொகுப்பு.
படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் சிம்பு - எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவர்தான் கதையின் மையம். ஓர் இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் சிம்பு, சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் முடிந்த பிறகும் ஆக்கிரமித்து நிற்பவர் எஸ்.ஜே. சூர்யாதான். அந்த மனிதர் வந்தாலே திரை தீப்பிடிக்கிறது. அவருடைய கேரியரிலேயே மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
இவர்கள் தவிர ஒய்.ஜி. மகேந்திரனுக்கும் பெயர் சொல்லும்வகையில் ஒரு படம் இது. இவர்கள் தவிர, மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் என நாம் கிட்டத்தட்ட மறந்துபோன பல நடிகர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கதாநாயகிக்கு பெரிய வேலையில்லை.
படத்தில் ஒரே ஒரு பாட்டு. நன்றாகத்தான் இருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாகவே இருக்கிறது.
படத்தின் நீளம் சற்று அதிகமெனத் தோன்றுகிறது. ஆனால், நிச்சயம் ரசிக்கத்தக்கப் படம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்