You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்டேலேனா ஆண்டர்சன்: ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது?
ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் தான் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
"நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்" என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் "எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.
"அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்" என்று தெரிவித்தார் மக்டேலேனா.
"இந்த அரசு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழும் அரசை நான் வழிநடத்த விரும்பவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
பதவி விலகலுக்கான காரணம் என்ன?
புதன்கிழமையன்று ஸ்வீடனின் சட்ட நடைமுறைப்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று மக்டெலெனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்வீடனின் பெண் வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 100 வருடங்களுக்கு பிறகு 54 வயதாகும் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மக்டெலெனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு கைத்தட்டல்களை வழங்கினர்.
மக்டேலேனா ஆண்டர்சனின் பதவி விலகலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சி தலைவர்களிடம் ஆலோசிக்கப்படும் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் முன்மொழிந்த பட்ஜெட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவிக்கவில்லை என்ற காரணத்தால் க்ரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது.
யார் இந்த மக்டேலேனா ஆண்டர்சன்?
முன்னாள் நீச்சல் வீராங்கனையான மக்டேலேனா 1996ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அப்போதைய பிரதமரான கோரன் பெர்சனுக்கு அரசியல் ஆலோசகராக அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
கடந்த ஏழு வருடங்களாக நிதியமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
மக்டேலேனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக அதுவரை பெண் பிரதமர் இல்லாத ஒரே நார்டிக் நாடாக ஸ்வீடன் இருந்தது.
அடுத்தது என்ன?
ஸ்வீடன் அரசியலில் உள்ள கடினமான அடுக்குகளை கொண்டு பார்த்தால் மக்டேலேனாவுக்கு இது கடைசி வாய்ப்பு என்று கூறமுடியாது என்கிறார் பிபிசி செய்தியாளர் மேடி சாவேஜ்.
மீண்டும் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்டேலேனா ஆண்டர்சன் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.
ஏனென்றால் கூட்டணியிலிருந்து விலகிய க்ரீன் கட்சி அவருக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இருப்பினும் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் வலது சாரி கட்சியான எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட பட்ஜெட்டையே பின்பற்ற வேண்டும்.
பிற செய்திகள்:
- கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
- சட்ட வரலாறு: நீதிபதிகளை சட்டமன்றத்தால் கைதுசெய்ய முடியுமா?
- ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்
- தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்