You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதுகுறித்த விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. `யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தது என பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ''உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்பின்னர், யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
அதில், ''நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, நீலகிரியின் பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். ''இன்னசென்ட் திவ்யாவுக்கான புதிய பணி என்ன?'' என்பது தொடர்பான அறிவிப்பு வெளிவரவில்லை.
அதேநேரம், ''யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது'' என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
`` மக்கள் நலனை புறந்தள்ளி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியல் அழுத்தம் கொடுத்து நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு அரசின் பொறுப்பற்றச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நீலகிரி மாவட்டத்தில் தீர்வு காண முடியாத பெரும் சிக்கலாக இருக்கிற யானை-மனித மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி எடுத்தார்.
அப்பணிகளில் எவ்விதத்தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முழுமையாக யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கும் வரை நீலகிரி மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சொந்தக் காரணங்களுக்காக மாவட்ட கலெக்டரே இடமாற்றம் கோருவது போன்ற முயற்சியை தி.மு.க அரசு ஏற்படுத்த முயல்கிறது'' எனவும் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
``ஓர் அரசு அலுவலரை இடமாற்றம் செய்வது என்பது இயல்பான நடைமுறைதானே?'' என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஆமாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது பலரை பாதித்துள்ளது. குறிப்பாக, கட்சி வேறுபாடில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாவட்ட ஆட்சியர் மூன்று ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அவர் சிறப்பாக மேற்கொண்டு வரும் பணியின் காரணமாக அவரது பதவியை நீட்டிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவரது பதவிக்காலம் நீடித்தால் அரசுக்குத்தான் நல்ல பெயர் கிடைத்திருக்கும். அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது'' என்கிறார்.
``யானைகள் வழித்தட மீட்பு விவகாரத்தில் என்ன நடந்தது?'' என `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` யானைகள் வழித்தடத்தை மீட்பது தொடர்பாக முதலில் வனத்துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், `அனைத்து ரிசார்ட்டுகளையும் மூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படையுங்கள்' எனக் கூறியது. அந்த தீர்ப்பை ரிசார்ட் உரிமையாளர்கள் எதிர்த்தனர்.
இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் சென்றது. அதன் இறுதித் தீர்ப்பில், உயர் நீதிமன்றம் தெரிவித்தது சரி எனக் கூறி, இதுதொடர்பாக மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றும் வேலைகள் நடந்தன'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய காளிதாசன், `` யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பான பணிகள் நடந்து வருவதால், அவரை மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. அதனால் அவர் பணியில் தொடர்ந்தார். அந்த வழக்கில் வனத்துறையின் சார்பாக, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பான பணிகளை முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றதும் ஸ்ரீகாந்தை பணியிட மாற்றம் செய்தனர். யானை வழித்தட மீட்பு பணியை அவர் ஒருங்கிணைக்கிறார் என்பதற்காக நிர்வாகரீதியிலான இடமாற்ற உத்தரவை ரத்து செய்யவில்லை. ஏனென்றால், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான கமிட்டிதான் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அவர்கள்தான் தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர்.
ஓர் அரசு அலுவலர் மாற்றப்படுவது என்பது நிர்வாகரீதியிலான நடைமுறைதான். ஒருவர் நீண்டகாலமாக மாவட்ட ஆட்சியராக இருந்தது கிடையாது. அவர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ஆனால், இன்னசென்ட் திவ்யா விவகாரத்தில் அவரின் பதவிக்காலம் முடிந்தாலும் அவரை இடமாற்றம் செய்வதை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இப்போது நீதிமன்றமே இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது'' என்கிறார்.
மேலும், `` யானைகள் வழித்தடத்தை மீட்கும் வகையில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். எந்த அதிகாரியாக இருந்தாலும் அதனை முன்னெடுத்துத்தான் ஆக வேண்டும். அப்படித்தான் இதனைப் பார்க்கிறோம். ஸ்ரீகாந்த் மாற்றப்பட்டதிலும் எங்களுக்கும் வருத்தம்தான். இதனை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்கிறார்.
இதுதொடர்பாக, இன்னசென்ட் திவ்யாவிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் சார்பில் முயன்றபோதும் அவர் பதில் அளிக்கவில்லை. தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிய இன்னசென்ட் திவ்யா, ` நான்கரை வருடங்கள் ஊட்டியில் இருந்ததே பெரிய சாதனைதான். என்னுடைய சேவையை நான் சிறப்பாக செய்துள்ளேன். நீதிமன்றம் என்னை விடுவித்துள்ளது. அரசு எங்கே பணியமர்த்துகிறதோ அங்கு வேலை செய்வேன்' எனக் கூறியுள்ளதாக நீலகிரி மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்