You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் சிறை தண்டனை என அறிவித்தது ஏன்? - ஆட்சியர் விளக்கம்
- எழுதியவர், ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை என புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்டுப்பாடுகளை ஆதரித்தும் கண்டித்தும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளை நடத்தினாலோ அல்லது அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டினாலோ பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 சட்டப்பிரிவு 51 முதல் 60ன் படி வழக்கு பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், சட்டப்பிரிவு 144 இந்திய தண்டனை சட்டத்தின்படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா நோய் பரிசோதனைக்காக மாதிரிகள் வழங்கியவர்கள் வெளியில் வந்து நோயை பரப்பினால் நோய்த்தொற்று சட்டம் 1897 சட்டப்பிரிவு 188 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் நோய்த்தொற்று சட்டம் 1897ன் கீழ் ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் நோயை பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு சிறை தண்டனை என்ற அறிவிப்பு குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
"நீலகிரி மாவட்டத்தில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் தான் அதிகம். எதற்காக முகக்கவசம் அணியவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்காது. இந்த நிலையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது",
"சிறைக்கு சென்ற பின்னர் யாருக்காவது இந்த நோய் வந்து இந்த உலகை விட்டு போக நேரிட்டால் அந்த குடும்பத்திற்கான மொத்த பொறுப்பும் அரசாங்கம் ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, குழந்தைகளின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்க வேண்டும்.. சொல்லும் போதே பின் விளைவுகளையும் சேர்த்து சொல்ல வேண்டும்" என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றாமல் சில கிராம பகுதிகளில் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல், நிகழ்ச்சிகளை நடத்தியதன் விளைவாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் ஐந்நூறை கடந்துள்ளது. அப்பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி நிகழ்ச்சிகளை நடத்தியதற்காகவும், தொற்று நோயை பரப்பியதற்காகவும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தவிர்த்து, எந்தவித தனிநபர் இல்ல நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது என எச்சரித்துள்ளோம்,"
மேலும், "ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு உரிய முன் அனுமதி பெற்று, அரசால் அனுமதிக்கப்பட்ட 50 நபர்கள் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என சான்று பெற்று பெயர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி அனுமதி பெறப்படவேண்டும்," என தெரிவித்தார்.
"மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். இவை அனைத்துமே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில் இருந்தோம், தற்போது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி நோய் பரவலை தடுத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி நோய்களை கட்டுப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்," என கேட்டுக்கொண்டார்.
ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளதும், மருத்துவ கழிவுகளின் அருகில் குரங்குகள் அமர்ந்து சாப்பிடும் வீடியோ புதன்கிழமை அன்று வெளியாகியது.
இதுகுறித்து கூறிய நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, "அந்த வீடியோ மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. உடனடியாக, மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டோம்." என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :