'மாநாடு': சிலம்பரசனின் எடை குறைப்பு முதல் பொருளாதார பிரச்னைகள் வரை படம் கடந்து வந்த பாதை

நடிகர் சிலம்பரசனின் 'மாநாடு' திரைப்படம் பல தடைகளை கடந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில் சிலம்பரசனின் எடை குறைப்பு, கொரோனா பொது முடக்கம், பொருளாதார பிரச்னைகள் என பல பிரச்னைகளை சந்தித்து இருக்கிறது.

படம் வெளியாகும் கடைசி நேரம் வரையிலும் வெளியீடு தள்ளிவைப்பு போல என்னென்ன பிரச்னைகளை படம் சந்தித்து இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

'மாநாடு' திரைப்படம் கடந்து வந்த பாதை

  • வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் 'மாநாடு' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த 2018ம் வருடம் ஜூலை மாதம் வந்தது.
  • இதன் பிறகு 2019ம் வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தது. ஆனால், நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என பிரச்னைகள் எழுந்தது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, சிம்புவுக்கு பதிலாக வேறு நடிகர்களை வைத்து படத்தை தொடர இருப்பதாக அந்த சமயம் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு சில பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.
  • இதனால் கோபமடைந்த சிம்பு 'மாநாடு' படத்திற்கு போட்டியாக 'மகா மாநாடு' என்ற படத்தை தானே தயாரித்து இயக்க இருப்பதாக அறிவித்தார்.
  • இதன் பிறகு, இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அடுத்த மாதமே படப்பிடிப்பு சிலம்பரசனுடன் ஆரம்பித்தது. 2020 ஜனவரியில் படத்தின் தொழிநுட்ப குழு குறித்தான அறிவிப்பு வந்தது.
  • 2020, பிப்ரவரி 3ம் தேதி, நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் 'அப்துல் காலிக்' என்ற அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியானது. இது ஓர் இஸ்லாமிய கதாப்பாத்திரம் என்பதால், இதன் பெயர் குறித்தான கலந்துரையாடலில் 'அப்துல் காலிக்' என்ற பெயர் அடிப்பட்டபோது, இது படத்தின் இசையமைப்பாளர் யுவன், இஸ்லாமுக்கு மதம் மாறியபின் வைத்துக்கொண்ட பெயர் என்பதால் அதை வைத்துவிட்டதாக படம் குறித்தான பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் வெங்கட் பிரபு.
  • படத்தின் முதல் ஷெட்யூல் சென்னை, ஹைதராபாத்தில் நடந்தது. இதன் பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச், 2020-ல் மாதம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் சினிமா துறை உட்பட அனைத்து துறைகளும் முடங்கியன.
  • இந்த சமயத்தில் சிம்புவு, அதிகரித்த தம் உடல் எடையை கேரளாவுக்கு சென்று குறைத்து சமூக வலைத்தளங்களிலும் தனக்கான அதிகாரபூர்வமான கணக்கை ஆரம்பித்தார்.
  • 2020 நவம்பர் மாதத்தில், அரசு பல கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது. இதன் பிறகு படத்தின் மீதமுள்ள பணிகள், க்ளைமேக்ஸ் விமான காட்சி, டப்பிங் பணிகள் ஆகியவை முழு வீச்சாக நடந்தன. படம் குறித்து அவ்வப்போது அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூக வலைத்தள பக்கங்களில் கொடுத்து வந்தார்.
  • மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படமும் 2021 ஜனவரி மாதம் வெளியானது.
  • படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து, இந்த வருடம் தீபாவளிக்கு (நவம்பர் 4) வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால், தீபாவளி வெளியீடாக 'அண்ணாத்த' படம் வெளியாக இருந்த நிலையில் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. இதனால் 'மாநாடு' தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் படம் நவம்பர் 25 அன்று வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
  • படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் 18ம் தேதி சென்னை, கிருஷ்ணவேணி திரையரங்கில் நடந்தது. இதில், தனக்கு பலரும் பிரச்னைகள் தருவதாகவும் 'அதை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன், என்னை மட்டும் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்' என சிம்பு மேடையில் கண்கள் கலங்கியபடி பேசியது அவரது ரசிகர்களிடையே வைரலானது.
  • சென்னை, ஹைதராபாத்தில் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக் குழு பங்கு கொண்டது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தவிர்க்க இயலாத காரணங்களால் பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
  • இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு முன்பே திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு பட வசூலை பாதிக்கும் என தனது ட்விட்டர் பக்கத்த்தில் சுரேஷ் காமாட்சி அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
  • பட வெளியீடு தள்ளி போனதற்கு காரணம் என இதுவும் சொல்லப்பட்டாலும் படத்திற்கான பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே பட வெளியீடு கடைசி நேரத்தில் சிக்கலானது எனவும் இந்த சிக்கலை படத்தின் ஓடிடி உரிமத்தை சோனி லீவ் நிறுவனமும், ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கி உதயநிதி, வேறு சில ஃபைனான்சியர்களின் உதவி மற்றும் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்திரர் கொடுத்த பணம் காரணமாக படத்தின் பொருளாதார பிரச்னைகள் நீங்கி திட்டமிட்டபடி இன்று வெளியாகி இருக்கிறது.
  • ஆனால் மேலே, சொன்னவை குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களிலோ அல்லது பேட்டிகளிலோ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை காலை காட்சி ரத்து

கடைசி நேரம் வரை 'மாநாடு' படம் வெளியாவதற்கு பல தடைகள் இருந்தன. ஆனால், திட்டமிட்டபடி 5 மணி காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று சென்னையில் பல முக்கிய தியேட்டர்களில் முதல் காட்சி 7.30, 9 மணிக்கே படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :