'பொன்னியின் செல்வன்': மணிரத்னம் வசமான வந்தியத்தேவன் எம்.ஜி.ஆருக்கு சாத்தியப்படாதது ஏன்?

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், MADRAS TALKIES

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'பொன்னியின் செல்வன்'.

இந்த கதை இதற்கு முன்பு, நாடக வடிவம், அனிமேஷன் என பல வடிவங்களிலும் வந்திருந்தாலும் சினிமா வடிவில் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பலரும் சினிமாவாக சாத்தியப்படுத்த நினைத்த 'பொன்னியின் செல்வன்' கதை, தமிழ் சினிமா வரலாற்றில் எதனால் தவறவிடப்பட்டது?

'பொன்னியின் செல்வன்'

சோழ தேசத்தில் விரிவடையும் 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், பழுவேட்டையர், நந்தினி, குந்தவை என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அந்த நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் பரிச்சயம். 1950ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் 'கல்கி' வார இதழில் தொடராக எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதி இருந்தார்.

பின்பு 2000க்கும் அதிக பக்கங்களை கொண்டு ஐந்து பாகங்கள் கொண்ட நாவலாக வெளியாகி இன்று வரை விற்பனையில் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர்-ன் 'பொன்னியின் செல்வன்'

கடந்த 1958-ஆம் வருடத்தில் 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படம் ஆக்குவதற்கான உரிமத்தை பெற்றார் எம்.ஜி.ஆர். பின்பு, அதனை தானே தயாரித்து, இயக்குவது என முடிவெடுத்தார். பத்மினி, சாவித்ரி, ஜெமினி கணேசன், நம்பியார் உள்ளிட்ட பலரையும் தேர்வு செய்து படத்திற்கான அறிவிப்பும் அப்போது வந்தது. இதில் வந்தியத்தேவன் மற்றும் அருண் மொழி வர்மன் கதாப்பாத்திரம் இரண்டுமே எம்.ஜி.ஆரே நடிக்க முடிவு செய்திருந்தார்.

ஆனால், அதற்கு பிறகு ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருந்து குணமாக எம்.ஜி.ஆர்-க்கு பல மாதங்கள் ஆனது. இதனால், அந்த சமயத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பல படங்களை முடித்து கொடுக்க வேண்டிய சூழலில் இருந்ததால், இயக்குநராக 'பொன்னியின் செல்வன்' படத்தை எம்.ஜி.ஆரால் சாத்தியப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

அதன் பிறகு 1990களில் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்'னை படமாக்க நினைத்தாலும் 'மருதநாயகம்' போலவே அதுவும் கனவாக போனது.

நாடக வடிவில் 'பொன்னியின் செல்வன்'

பொன்னியன் செல்வன்

பட மூலாதாரம், instagram @ravivarman_r

திரைப்படமாக சாத்தியப்படுத்த முடியாவிட்டாலும் நாடக வடிவில் சென்னை YMCA மைதானத்தில் அரங்கேறியது 'பொன்னியின் செல்வன்'. 1999-ல் வந்த இந்த நாடகத்தில் நடிகர் நாசர், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அதன் பிறகு, தற்போது 'பொன்னியின் செல்வன்' வெப்சீரிஸாக தயாராகிறது. இதனை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

தற்போது நாடகம், தொலைக்காட்சி தொடர், வெப்சீரிஸ் என்பதை எல்லாம் தாண்டி, அனிமேஷன் தொடராகவும், பாட் காஸ்ட், யூடியூப் வீடியோக்களில் தொடர் என இப்போதுள்ள தலைமுறை வரையும் 'பொன்னியின் செல்வன்' வெவ்வேறு வடிவங்களில் பயணப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.

மணிரத்னம் வசமான 'பொன்னியின் செல்வன்'

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், MADRAS TALKIES

இப்படி எம்.ஜி.ஆர்-ல் இருந்து கமல்ஹாசன் வரை பலரும் சினிமாவாக்க முயன்ற 'பொன்னியின் செல்வன்' கதையை மணிரத்னம் கையில் எடுத்திருப்பதாக 2010-ல் தகவல் வெளியானது.

இதில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நடிகர் விஜய், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால், அப்போது தயாரிப்பு செல்வு உள்ளிட்ட சில காரணங்களால் அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2019ல் இயக்குநர் மணிரத்னம் லைகா புரொடக்‌ஷனுடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.

இதில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வர்யாராய் பச்சன், 'ஜெயம்' ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக 'ஜெயம்' ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஷ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மணிரத்னம் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேலுடன் இணைந்து எழுதியிருக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், கலை இயக்கம் தோட்டா தரணி.

2019ன் இறுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் திரைப்படமாக உருவாகும் இது தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.

தாய்லாந்தின் காட்டுப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்தான் 2020-ல் கொரோனா முதல் அலை தலைதூக்க தொடங்கியது. அனைத்து துறைகளும் முடங்க இதற்கு சினிமாத் துறையும் விதிவிலக்கில்லாமல் சிக்கி கொண்டது. வரலாற்று புதினத்தை படமாக்க வேண்டும் அதுவும் 2000 பக்கங்களுக்கு மேல் கொண்ட நாவலை திரை வடிவமாக்குவது எளிதானதல்ல. நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப குழு என பலரது உழைப்பு இங்கே நடக்க வேண்டும். ஆனால், கொரோனா அச்சத்தில் இவை அனைத்தும் தடைப்பட்டது.

இதற்குள் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களது தேதி, படத்திற்காக அவர்களது உருவமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் குழம்பி நின்றது. 'எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே 'பொன்னியின் செல்வன்' திரையுலகினருக்கு சாத்தியப்படாமலே இருக்கிறதே' என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தபோதுதான் கொரோனாவின் தீவிரம் குறைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு

தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்றே குறைந்திருப்பதால் கட்டுப்பாடுகளோடு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. இதற்கிடையில் சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டது. அதில் படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்பதை தெரிவித்து அதில் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தற்போது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுவையில் நடந்து வருகிறது. இதற்காக நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சனும் இணைந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' தனது கனவு படம் என்பார். கனவு வசமாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :